ADDED : மார் 18, 2026 09:41 PM

வெளிநாட்டு இன நாய்கள் இருக்குமிடத்தில், ஹீரோ போல தனித்து செயல்படும் திறன் நம்மூரு கோம்பைக்குத்தான் இருக்கிறது என்கிறார், 'ப்ரீடர்' அரவிந்த்.
மதுரை, அண்ணாநகரில், கென்னல் நடத்தி வரும் இவர், சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி. நிறைய இன நாய்களை வளர்க்கும் இவர், கோம்பையின் தனித்துவம் பற்றி நம்மிடம் பகிர்ந்தவை:
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் காணப்படும் கோம்பை இன நாய், ஆரம்பத்தில் வேட்டைக்கும், பாதுகாவலுக்கும் பயன்படுத்தப்பட்டது. தற்போது, பாதுகாவல் பணிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. தன் எல்லைப்பரப்பை தானே வரையறுத்து கொண்டு அதற்குள் அந்நியர்களை அனுமதிக்காது. குரைத்தே வெளியாட்களை காட்டி கொடுத்துவிடும்.
பெல்ஜியம் மலினோய்ஸ் இன நாய்க்கு இணையான தனித்திறன், நம்மூரு கோம்பைக்கு இருக்கிறது. இதை பாதுகாவலுக்காக வாங்கும் போது மறக்காமல் அதன் பெற்றோர் குறித்து பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில் இது தோற்றத்திற்கு தெருநாயை போலவே இருக்கும்.
உடல் சிவப்பு நிறத்திலும், மூக்கில் இருந்து கண் வரை கருப்பாகவும் காணப்படும். காதிலும் கருப்பு நிறம் படர்ந்திருக்கும். முதுகில் நேராக கோடு இருக்கும். இந்த அடையாளங்கள் பார்ப்பது அவசியம். நிறைய இன நாய்கள் இருக்குமிடத்தில் கோம்பை தான் ஹீரோ. இரண்டு வயதுக்கு மேல் தன் புறச்சூழலை புரிந்து அதற்கேற்ப செயல்படும் திறன் இதற்குண்டு. எளிய பராமரிப்பு, அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. தற்போது நாட்டு இன நாய்களை சிலர் தேடி வாங்குவதால், கோம்பைக்கு மார்கெட்டில் மவுசு அதிகரித்துள்ளது, என்றார்.
