'ரெடிமேடு கான்கிரீட்' தேர்வு செய்யும்போது ஜாக்கிரதை!
'ரெடிமேடு கான்கிரீட்' தேர்வு செய்யும்போது ஜாக்கிரதை!
UPDATED : மே 15, 2026 07:47 PM
ADDED : மே 15, 2026 07:42 PM

கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களில் இட பற்றாக்குறை, ஆள் பற்றாக்குறை காரணமாக சில சமயங்களில் கான்கிரீட் தயாரிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இச்சமயத்தில் 'ரெடிமேடு கான்கிரீட்' என்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இக்கான்கிரீட்டை ஒரு குழாய் வழியாக எடுத்து சென்று பயன்படுத்த முடியும். சில சமயங்களில் கான்கிரீட் தரமற்று இருப்பதாக கட்டட உரிமையாளர்கள் புலம்புவதும் உண்டு. எனவே, தரமான ஆர்.எம்.சி., நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கின்றனர் பொறியாளர்கள்.
கோயம்புத்துார் சிவில் இன்ஜினியர்கள் சங்க உறுப்பினர் மாரிமுத்துராஜ் கூறியதாவது:
நம்பகமான மற்றும் ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் பெற்ற ஆர்.எம்.சி., நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். நமக்கு தேவையான 'எம்.20 கான்கிரீட்'டை சரிவர 'மிக்ஸிங்' செய்து தருகிறார்களா என்பதை, அவர்களது தொழிற்கூடத்துக்கு சென்று சரிபார்க்க வேண்டும்.
தரமான மணல், ஜல்லி, சிமென்ட்(அரை இன்ச் அல்லது முக்கால் இன்ச் ஜல்லி மற்றும் சிமென்ட்) ஆகியன சொன்ன தரத்தில் உள்ளதா என பார்க்க வேண்டும். நமது பணியிடத்தில் இருந்து 10 கி.மீ., தொலைவில் இருக்கும் ஆர்.எம்.சி.,யை தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மாறாக, 50, 60 கி.மீ., தொலைவில் இருக்கும் இடங்களை தேர்ந்தெடுத்தால் சிமென்ட் கட்டி ஆகாமல் இருக்க அதிக அளவு தண்ணீரை கலந்து அனுப்பி வைப்பார்கள். அதிக தண்ணீர் ஊற்றி வரும் கான்கிரீட்டை 'ஸ்லம்ப் டெஸ்ட்' என்ற சோதனை செய்து தரத்தை அறிந்துகொள்ளலாம்.
கான்கிரீட் லாரி நீண்ட நேரம் போக்குவரத்தில் நின்றால் கான்கிரீட் இறுக தொடங்கும். அதை தவிர்க்க அதிக தண்ணீரையோ அல்லது தரம் குறைந்த அமிலங்களையோ சேர்ப்பார்கள். அதிக தண்ணீர் சேர்த்தால் கான்கிரீட்டில் விரிசல் ஏற்படும்; ஆயுட்காலம் குறையும்.
எனவே, லாரி கிளம்பிய நேரத்திற்கும், உங்கள் இடத்திற்கு வந்த நேரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை கவனிக்க வேண்டும்.
இரண்டு மணி நேரத்துக்கு மேல் இருந்தால் அந்த கான்கிரீட்டை தவிர்ப்பது நல்லது. பொதுவாக கொள்ளளவில் இருந்து ஒரு சதவீதம் மட்டுமே முன், பின் இருக்கலாம். பதிலாக ஆர்.எம்.சி., கொள்ளளவு 5, 10 சதவீதம் குறைவாக இருந்தால் கூடாது.
இவ்வாறு, அவர் கூறினார்.
