பெல்' நிறுவன இன்ஜினியர்கள்...வந்தாச்சு! ரெடியாகின்றன ஓட்டுப்பதிவு மெஷின்கள்
பெல்' நிறுவன இன்ஜினியர்கள்...வந்தாச்சு! ரெடியாகின்றன ஓட்டுப்பதிவு மெஷின்கள்
ADDED : ஏப் 15, 2026 04:46 AM

கோவை, ஏப். 15- கோவையில் உள்ள தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு மெஷின்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை சரிபார்த்து, புது பேட்டரி பொருத்தி, ஓட்டுப்பதிவுக்கு தயார்படுத்துவதற்காக, பெல் நிறுவன இன்ஜினியர்கள் வருகை தந்துள்ளனர். அப்படி, இப்படி என இதோ வந்து விட்டது தேர்தல். இன்னும் எட்டு நாட்களே உள்ளன. நம் மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஓட்டுப்பதிவுக்கு தேவையான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவினர் செய்து வருகின்றனர்.
183 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கோவை வடக்கு, தெற்கு, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்துார், சிங்காநல்லுார் ஆகிய 5 தொகுதிகளில் வேட்பாளர்கள் அதிகம் என்பதால், 2 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
ஒவ்வொரு தொகுதியிலும் பயன்படுத்த உள்ள இயந்திரங்கள், எந்தெந்த ஓட்டுச்சாவடிக்கு அனுப்ப வேண்டும் என்கிற குலுக்கல், அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்டது.
வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில், தேர்தல் ஆணைய மென்பொருள் வாயிலாக குலுக்கல் நடத்தி, ஓட்டுச்சாவடி வாரியாக இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டன.
அடுத்த கட்டமாக, அவற்றில் புது பேட்டரி பொருத்தி, பேலட் ஷீட் இணைக்க வேண்டும். வேட்பாளர்களின் பெயர், கலர் புகைப்படம் மற்றும் சின்னங்களுடன் பேலட் ஷீட் அச்சிடப்பட்டு உள்ளது.
வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்பதை உறுதி செய்வதற்காக பயன்படுத்தப்படும் 'விவி பேட்' இயந்திரத்தில், சின்னம் அச்சாகி, ரசீதாக வரும்.
ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கான சின்னங்களை, இயந்திரங்களில் பதிவேற்ற வேண்டும்.
இதற்காக ஒரு சட்டசபை தொகுதிக்கு இருவர் வீதம் 20 பெல் நிறுவன இன்ஜினியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை வருகை தந்துள்ள அவர்கள், நாளை முதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாக, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
