/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருவனந்தபுரத்துக்கு வந்தே பாரத் ரயில்! ரயில்வே அமைச்சரிடம் வானதி வலியுறுத்தல்
/
திருவனந்தபுரத்துக்கு வந்தே பாரத் ரயில்! ரயில்வே அமைச்சரிடம் வானதி வலியுறுத்தல்
திருவனந்தபுரத்துக்கு வந்தே பாரத் ரயில்! ரயில்வே அமைச்சரிடம் வானதி வலியுறுத்தல்
திருவனந்தபுரத்துக்கு வந்தே பாரத் ரயில்! ரயில்வே அமைச்சரிடம் வானதி வலியுறுத்தல்
ADDED : பிப் 07, 2024 01:46 AM

கோவை;கோவையிலிருந்து தென் மாவட்ட நகரங்களுக்கு, 13 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்ட ஐந்து ரயில்களை மீண்டும் இயக்க வேண்டுமென்று, ரயில்வே அமைச்சரிடம் கோவை தெற்கு எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் நேரில் வலியுறுத்தியுள்ளார்.
கோவையின் ரயில் தேவைகள் தொடர்பாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் பா.ஜ., தேசிய மகளிரணி செயலாளரும், கோவை தெற்கு எம்.எல்.ஏ.,வுமான வானதி சீனிவாசன், தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தக் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி, டில்லியில் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து, அவர் மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில், வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது:
கோவையில் கேரளாவைச் சேர்ந்த, ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக, கேரளாவுக்கு அடிக்கடி பயணம் செய்கின்றனர்.
கோவையிலிருந்து கேரள நகரங்களுக்கு, தினமும் ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்பட்டாலும், அவையும் போதாத நிலையில், 82 ஆம்னி பஸ்கள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.
எனவே, கோவையிலுள்ள பல லட்சம் கேரள மக்கள் பயன் பெறும் வகையில், கோவையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு எட்டு பெட்டிகள் கொண்ட, வந்தே பாரத் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால், பாலக்காடு, கோட்டயம், எர்ணாகுளம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள, மக்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
பயண நேரத்தை மாற்றணும்
அதேபோன்று, கோவையிலிருந்து பெங்களூருக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலின் புறப்பாடு நேரத்தையும், பயண நேரத்தையும் மாற்றி அமைக்க வேண்டும்.
அதிகாலை 5:00 மணிக்கு, கோவையில் புறப்படும் ரயிலை, காலை 6:00 மணிக்கு மேல் புறப்படும் வகையிலும், ஆறரை மணி நேர பயணத்துக்குப் பதிலாக, ஐந்தே முக்கால் மணி நேரத்தில் செல்லும் வகையிலும் மாற்ற வேண்டும்.
கோவை மாவட்டத்தில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த, பல லட்சம் மக்கள் வசிக்கின்றனர். கடந்த 2009 க்கு முன்பாக, கோவையிலிருந்து தென் மாவட்ட நகரங்களுக்கு, 11 ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
மீட்டர் கேஜ் ஆக இருந்த பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக அவை நிறுத்தப்பட்டன. ஆனால் பாதை அமைத்து, பல ஆண்டுகளான பின்னும், இன்னும் அவை இயக்கப்படவில்லை.
இதனால் இங்குள்ள தென் மாவட்ட மக்கள், அரசு பஸ்களையே முழுவதும் நம்பியுள்ளனர். இப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒரே ஒரு ரயில் மட்டுமே, தென்காசி வழியாக திருநெல்வேலிக்கு இயக்கப்படுகிறது.
தென் மாவட்ட மக்கள் எளிதில் பயணம் செய்யும் வகையில், முன்பு இயக்கப்பட்ட ரயில்களில் ஐந்து ரயில்களை மீண்டும் இயக்குவதற்கு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

