ADDED : செப் 10, 2025 10:05 PM
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய ரேஷன் கடை கட்ட பூமி பூஜை நடந்தது.
இங்குள்ள ஆசிரியர் காலனி, எஸ்.எம். நகர், ஸ்ரீராம் நகர், கணேஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்க, ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று வாங்கி வந்தனர்.
தற்போது, என்.ஜி.ஜி.ஓ., காலனியில் ரயில்வே மேம்பாலம் புதிதாக கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சுமார், 2 கி.மீ., தூரம் சுற்றி ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர். ஆபத்தான ரயில் பாதையை கடந்து வர வேண்டி உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஒன்றிய கவுன்சிலர் நிதியிலிருந்து ஆறாவது வார்டில் உள்ள ஸ்ரீராம் நகரில், 14.70 லட்சம் ரூபாய் செலவில் புதிய நியாய விலை கடை கட்ட பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கார்த்தி ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.