ADDED : ஜூலை 25, 2025 09:32 PM
மேட்டுப்பாளையம்; கோவை, நீலகிரி மாவட்டங்களின் எல்லையில் உள்ள பில்லுார் வனப்பகுதியில், 100 அடி உயரத்தில் பில்லுார் அணை அமைந்துள்ளது. அணையில், 97 அடிக்கு நீர்மட்டம் உயரும்போது, பாதுகாப்பு நலன் கருதி, அணை நிரம்பியதாக, நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்படும். கடந்த மே மாதம் 25ம் தேதி பில்லுார் அணை நிரம்பியது. அதை தொடர்ந்து ஜூன் மாதம், 15ம் தேதி மீண்டும் நிரம்பி வழிந்தது.
நேற்று முன்தினம் மாலை பில்லுார் அணையின் நீர்மட்டம், 86 அடியாக இருந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு அணையின் நீர்மட்டம், 85 அடியாக இருந்தது. பில்லுார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சியில், 78 மில்லி மீட்டர் மழையும், அப்பர் பவானியில், 39 மி.மீ., முக்கூர்தியில், 40 மி.மீ., எமரால்டில், 10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதனால் அணைக்கு நீர்வரத்து ஆரம்பத்தில் வினாடிக்கு, 3,000 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல அது, 7,000 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
நேற்று மாலை, 5:00 மணிக்கு அணையின் நீர்மட்டம், 95.75 அடியை எட்டியது. இரவு 8:00 மணிக்குள், 97 அடியை எட்டி பில்லூர் அணை நிரம்பும் என, அணை நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிட்டனர்.
நேற்று காலை, 6:00 மணிக்கு அணையில், 85.50 அடியாக நீர்மட்டம் இருந்தது. மாலை, 7:30 மணிக்கு, 97 அடியாக நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. கடந்த இரண்டு மாதத்தில் மூன்றாவது முறையாக அணை நிரம்பியது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட் டு ள்ளது.