/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொபைல் 'சிக்னல்' கிடைக்காததால் பில்லுார் மின் வாரிய ஊழியர்கள் அவதி; அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பதில் சிரமம்
/
மொபைல் 'சிக்னல்' கிடைக்காததால் பில்லுார் மின் வாரிய ஊழியர்கள் அவதி; அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பதில் சிரமம்
மொபைல் 'சிக்னல்' கிடைக்காததால் பில்லுார் மின் வாரிய ஊழியர்கள் அவதி; அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பதில் சிரமம்
மொபைல் 'சிக்னல்' கிடைக்காததால் பில்லுார் மின் வாரிய ஊழியர்கள் அவதி; அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பதில் சிரமம்
ADDED : ஜூலை 23, 2025 09:30 PM
மேட்டுப்பாளையம்; பில்லூர் அணைப்பகுதியில், பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் டவர் அமைக்க மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம், பில்லூர் வனப்பகுதியில், பில்லூர் அணையும், மின் உற்பத்தி நிலையமும், பரளியில் மின் உற்பத்தி நிலையமும் உள்ளன.
இந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்களில் நிரந்தரம் மற்றும் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ், 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
பில்லூர் அணை அருகே பில்லூர், கீழ்பில்லூர், மேல் பில்லூர், நீராடி, பரளி, பரளிக்காடு உட்பட 20க்கு மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன.
பில்லூர் அணையும், மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளும், மலைகளுக்கு கீழே அமைந்துள்ளன. இதனால் எந்த மொபைல் போன் சிக்னலும் கிடைப்பதில்லை. இந்த விஞ்ஞான காலத்தில், இப்பகுதி மக்களுக்கு மொபைல் போன் என்பது எட்டாக் கனியாக உள்ளது.
இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது: பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பது பற்றியும், அணை நிரம்புவது பற்றியும், அவசர தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றால், அணையின் மீது குறிப்பிட்ட இடத்திற்கு சென்றால் மட்டுமே, பி.எஸ்.என்.எல்., போன் சிக்னல் கிடைக்கும். மற்ற இடங்களில் எந்த போன் சிக்னலும் கிடைப்பதில்லை.
அணைக்கு திடீரென நீர்வரத்து வந்து, அணை நிரம்புவது குறித்து, மாவட்ட நிர்வாகத்துக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுப்பது என்றால், மின்வாரிய துறையின் சார்பில், ஹாட் லைன் வாயிலாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும்.
அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிப்பர். இங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு போன் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியில் 2 ஜி சிக்னல் மட்டுமே கிடைக்கிறது. தற்போது 5ஜி வரை நகர் பகுதிகளில் பயன்பாட்டில் உள்ளது.
எனவே வளர்ந்து வரும் விஞ்ஞான காலத்தில், மொபைல் போன் சிக்னல் கிடைக்காமல், மலைவாழ் மக்களும், மின்வாரிய அதிகாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மத்திய அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பில்லூர் அணை பகுதியில், பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.