மக்காச்சோள சாகுபடியில் உயிரி தொழில்நுட்பம் அவசியம்; 15 சதவீதம் வரை மகசூலை அதிகரிக்கலாம்
மக்காச்சோள சாகுபடியில் உயிரி தொழில்நுட்பம் அவசியம்; 15 சதவீதம் வரை மகசூலை அதிகரிக்கலாம்
UPDATED : செப் 04, 2025 06:45 AM
ADDED : செப் 03, 2025 11:10 PM

மக்காச்சோளத்தின் தேவை அதிகரித்து வரும் இன்றைய நிலையில், அதன் சாகுபடியில் உயிரி தொழில்நுட்பத்தை உடனடியாக பயன்படுத்த வேண்டியது அவசியம் என, நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்திய மக்காச்சோள ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஐ.எம்.ஆர்.,), இந்திய உயிரிதொழில்நுட்ப கூட்டமைப்பு நிறுவனம் (பி.சி.ஐ.எல்.,) மற்றும் இந்திய விதைத் தொழில்துறை கூட்டமைப்பு (எப்.எஸ்.ஐ.ஐ.,), சார்பில், 'மக்காச்சோளத்தில் உயிரி தொழில்நுட்பம்; சவால்களும் வாய்ப்புகளும்' என்ற தலைப்பிலான பயிலரங்கு, பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில் நடந்தது.
தேவை அதிகரிப்பு தொழில்முனைவோர், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், விவசாய பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கருத்தரங்கில், வருங்காலங்களில் இந்திய மக்காச்சோள சாகுபடியில், மரபணு மாற்றம் மற்றும் மரபணு தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மக்காச்சோள உற்பத்தியில் உலகளவில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. 2024--25ம் ஆண்டில் 1.2 கோடி ஹெக்டர் பரப்பில், ஆண்டுக்கு 4.23 கோடி டன் மகசூல் கிடைத்தது. எனினும், ஹெக்டருக்கு சராசரி உற்பத்தித் திறன் 3.5 டன் தான். இதுவே உலக அளவில் 5.8 டன்னாக உள்ளது.
2030ல் மக்காச்சோளத்துக்கான தேவை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கோழிப்பண்ணை, மாட்டுத் தீவனம், ஸ்டார்ச், எத்தனால் உற்பத்திக்கு அதிக தேவை உருவாகி வருகிறது.
பெருவாரியான நன்மை கருத்தரங்கில் எப்.எஸ்.ஐ.ஐ., துணைத் தலைவர் ராஜ்வீர் ரதி பேசுகையில், “வறட்சியைத் தாக்குப்பிடித்தல், பூச்சி எதிர்ப்புத் திறன், நுண்ணூட்ட செறிவு கொண்ட மக்காச்சோள ரகங்கள், வருவாய் மற்றும் உற்பத்திச் செலவை நிலைப்படுத்தும்,” என்றார்.
இந்திய மக்காச்சோள ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ஜாட் பேசுகையில், ''வழக்கமான மக்காச்சோள சாகுபடி முறையில், உயிரி தொழில்நுட்பவியல் முறைகளை இணைப்பது, மரபணு பண்புகளை மேம்படுத்தி, இனப்பெருக்கத் திறனை அதிகரிக்கும்.
இதனால், மகசூல் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கும். இதை முறையாக நடைமுறைப்படுத்தும்போது, விவசாயிகள், தீவன மற்றும் எத்தனால் தொழிற்சாலைகள் என, ஒட்டுமொத்த மக்காச்சோள வினியோக சங்கிலிக்கும் பெருவாரியான நன்மைகள் கிடைக்கும்,'' என்றார்.
வரன்முறைப்படுத்துதலில் உள்ள சிக்கல்கள் குறித்தும் பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவில், அரசு மற்றும் பொதுத்துறை ஆராய்ச்சிகள், தனியார் விதைப் பண்ணைகள் என்ற கட்டமைப்பு வலுவாக இருப்பினும், வரன்முறைப்படுத்துதலில் உள்ள தாமதங்கள், வயல் ஆய்வுகள் மற்றும் வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை மட்டுப்படுத்துகின்றன.
முக்கிய தருணத்தில் இந்தியா பி.சி.ஐ.எல்., தலைமை பொது மேலாளர் விபா அகுஜா பேசுகையில், “இந்தியா முக்கியமான தருணத்தில் உள்ளது. வேறெந்த பயிர்களை விடவும், மக்காச்சோளத்துக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது.
நாட்டின் உணவு, தீவனம், எரிபொருள் பாதுகாப்பு போன்றவை, உற்பத்தித்திறன் குறைவை நாம் எப்படி நிரப்பப் போகிறோம் என்பதைச் சார்ந்து அமையும். நமக்கு, அறிவியல்பூர்வமான கொள்கைகளும், துரிதமான ஒப்புதல்களும் மற்றும் விவசாயிகளின் வயல்களில், நேரடியாக புத்தாக்கங்களை வழங்கக்கூடிய கூட்டுச்செயல்பாடுகளும் தேவை,” என்றார்.
விஞ்ஞானிகளும், நிபுணர்களும், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணு திருத்தப்பட்ட மக்காச்சோளத்துக்கான வாய்ப்புகளையும், வேளாண் உயிரி தொழில்நுட்பம் சார்ந்த ஒழுங்கமைவு கட்டமைப்புகளையும் முன்வைத்தனர்.
நிறைவாக, இந்தியா உலகளவில் போட்டியிடுவதற்கு, மக்காச்சோள சாகுபடியில் உயிரிதொழில்நுட்ப பயன்பாட்டை வேகப்படுத்த வேண்டும் என, நிபுணர்கள் ஒருமித்து வலியுறுத்தினர்.
- நமது நிருபர் --