/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனத்துறை வாயிலாக பறவைகள் கணக்கெடுப்பு
/
வனத்துறை வாயிலாக பறவைகள் கணக்கெடுப்பு
ADDED : டிச 29, 2025 05:33 AM
ஆனைமலை: ஆனைமலை பகுதியில் உள்ள நீர் நிலைகளில் வனத்துறையினர் வாயிலாக, பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவக்கப்பட்டது.
தமிழகத்திலுள்ள நீர்நிலைகளுக்கு, உள்நாட்டில் இடம் பெயரும் பறவைகள், குறிப்பிட்ட சீசனில் வலசை வந்து செல்லும். இதில், பல வகையான அரிய வகை பறவைகளும் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, நீர்நிலைகளுக்கு வந்து, ஏப்., மாதம் இறுதி வரை நீர்நிலைப்பகுதிகளில் இருக்கும்.
இவ்வாறு, வரும் பறவைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி வனத்துறை வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. கணக்கெடுப்பு வாயிலாக பறவைகளின் வலசை குறித்த துல்லியமான விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.
மேலும், அப்பறவைகளை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் திட்டமிடப்படுகிறது. ஆண்டில் இரு முறை இத்தகைய கணக்கெடுப்பு வனத்துறையால் மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டு வனத்துறையினர், பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள ஆழியாறு அணை, எலவக்கரை குளத்தில் இக்கணக்கெடுப்பு நடக்கிறது ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள நீர் நிலைகளில் அருவா மூக்கன், நீர் வாத்து, நாரை, வெள்ளை நிற கொக்கு, நடுத்தர கொக்கு, நாமக்கோழி, மீன்கொத்தி போன்ற பறவைகள் குறித்தும் கணக்கெடுக்கப்படுகிறது.
இதில், வனத்துறையினர், தன்னார்வலர்கள், கல்லுாரி மாணவர்கள் ஈடுபட்டனர். கணக்கெடுப்பு குழுவினர் கூறுகையில், 'பறவைகள் கணக்கெடுப்பு வாயிலாக வலசை வருதல் உள்ளிட்ட பறவைகளின் வாழ்வியல் சூழலை கண்டறிய முடியும். இப்பகுதியில் தங்கும் பறவைகளுக்கான சூழல், நீர்நிலைகளில் பாதிக்காமல் இருப்பது குறித்தும் கணக்கெடுப்பில் தெரியவரும்,' என்றனர்.

