/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெருமாள் கோவில்களில் நாளை வைகுண்ட ஏகாதசி
/
பெருமாள் கோவில்களில் நாளை வைகுண்ட ஏகாதசி
ADDED : டிச 29, 2025 05:33 AM

பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில், நாளை 30ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.
பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நாளை அதிகாலை, 4:30 மணி முதல் மங்கள இசை, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாராயணம் மற்றும் காலை, 5:00 மணிக்கு வைகுண்ட வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, சாற்றுமுறை நடைபெற்று தீர்த்த பிரசாதம் வழங்கப்படும்.
நரசிம்மர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க லட்டு தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம், 15 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பில் கோவில் நிர்வாகம், லட்சுமி நரசிம்மர் சேவா சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
* பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதில், வைகுண்ட ஏகாதசி விழாவில், இன்று, (29ம் தேதி) மூலவர், முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். நாளை முதல், 31ம் தேதி வரை மூலஸ்தானத்தில் மூலவருக்கு முத்தங்கி சேவை நடைபெறுகிறது.
நாளை (30ம் தேதி) அதிகாலை, 4:00 மணிக்கு மேல், 5:00 மணிக்குள் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.சொர்க்கவாசலில் கட்டுவதற்கு காய், கனிகள், திரவிய பொருட்கள் அனைத்தும் இன்று, (29ம் தேதி) காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை கோவிலில் வழங்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
* ஜமீன் ஊத்துக்குளி கரிவரதராஜப்பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவில், நாளை, 30ம் தேதி காலை, 5:00 மணி முதல் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார்.
* பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில், இன்று (29ம் தேதி), இரவு 5:30 மணிக்கு, சுவாமிக்கு, 27 வகையான திவ்ய திருமஞ்சன அபிஷேகம் நடக்கிறது.
(மேலும், சொர்க்கவாசலில் கட்டுவதற்கு காய், கனிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கும் பக்தர்கள், (29ம் தேதி) இன்று இரவு 7:00 மணிக்குள் வழங்க வேண்டும்.)
30ம் தேதி, அதிகாலை 4:30 மணிக்கு, வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு நடக்கிறது.
உடுமலை உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, நாளை 30ம் தேதி காலை பரமபதவாசல் திறப்பு நடைபெறுகிறது.
பல்வேறு சிறப்புகளை கொண்ட மார்கழி மாதத்தில், வைணவ தலங்களில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து உற்சவம், பரமபத வாசல் திறப்பு வைபவம், ராப்பத்து உற்சவம் என வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், கடந்த 20ம் தேதி பகல் பத்து உற்சவம் துவங்கி, பாசுரங்கள் சேவை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நாளை, (30ம் தேதி) காலை, 5:00 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது. அன்று மாலை, 5:30 மணிக்கு ராப்பத்து உற்சவம் துவங்குகிறது.
ஜன., 8ல், நம்மாழ்வார் மோட்ஷம் நடக்கிறது. ஜன., 14ல், ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கிறது. இதே போல், உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களிலும், பரமபதவாசல் திறப்பையொட்டி சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், மக்களும் செய்து வருகின்றனர்.
-- நிருபர் குழு -:

