பறவை காய்ச்சல் 'அலர்ட்'; ரத்த மாதிரிகள் சேகரிப்பு
பறவை காய்ச்சல் 'அலர்ட்'; ரத்த மாதிரிகள் சேகரிப்பு
ADDED : மார் 07, 2026 05:44 AM
மேட்டுப்பாளையம்: பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, கோவை ஊரகப் பகுதிகளில், வாத்து, கோழிகளுக்கு, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், ரத்த மாதிரிகள் எடுத்து சுழற்சி முறையில் பரிசோதனை செய்யப்படுகின்றன.
பறவைக் காய்ச்சல் எதிரொலியால், சென்னை மற்றும் அதனருகில் உள்ள 14 மாவட்டங்கள் 'அலர்ட்' செய்யப்பட்டுள்ளன. ஒரு பகுதியாக, கேரள எல்லையில் உள்ள கோவை மாவட்டத்தில், ஊரக பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில், பறவை காய்ச்சல் தொடர்பாக தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, அன்னுார், துடியலுார் என மாவட்டம் முழுவதும் வீடுகள், பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகளுக்கு சுழற்சி முறையில், கால்நடை துறை மருத்துவர்கள் ரத்த மாதிரிகள் எடுத்து, ஆய்வுக்கு அனுப்பி வருகின்றனர்.
கோவை மண்டல கால்நடைத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள 1,200 கோழிப் பண்ணைகளில், தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 40 நாட்களுக்கு ஒரு முறை, சுழற்சி முறையில் கோழிகளுக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. தவிர, வீடுகள், பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்துக்களுக்கும் ரத்த மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் இதுவரை பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை; இருப்பினும் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
காரமடை அருகே, கேரள எல்லையோரம் அமைந்துள்ள கோபனாரி, முள்ளி கிராமங்களை கால்நடை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. பறவைகள் இறந்து கிடந்தால், அதை வெறும் கைகளால் தொடக்கூடாது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தகவல் கொடுத்து அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
