ADDED : ஆக 01, 2025 09:29 PM
அன்னுார்; அவிநாசி தொகுதியில், பா.ஜ., மாநிலத் துணைத் தலைவர் ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் 68,000 ஓட்டுச்சாவடிகள் (பூத்துகள்) உள்ளன. இவற்றில் பெரும்பாலான பூத்களில் பா.ஜ., கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டிகளை ஆய்வு செய்யும் நிகழ்வு மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அவிநாசி தொகுதி பொறுப்பாளராக, பா.ஜ., மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று நாட்களாக குப்பே பாளையம், கணேசபுரம், பச்சாபாளையம், குமாரபாளையம், ஆகிய ஊர்களில் பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் முகவர்கள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்தார். கட்சி நிலவரம் குறித்து விசாரித்தார். ஆவணங்களை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'தமிழக பா.ஜ.,வில் மிகப்பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., வுடன் பலமான கூட்டணி அமைந்ததால், தி.மு.க., கூட்டணிக்கு அச்சம் ஏற்பட்டு விட்டது. தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில், கொலை, கொள்ளைகள் அதிகரித்து விட்டன. தி.மு.க., ஆட்சி முடிய வேண்டும் என தமிழக மக்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர்' என்றார்.
ஆய்வில், பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, வட்டாரத் தலைவர்கள் கணேசமூர்த்தி, ஆனந்தன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.