குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு: பா.ஜ., வேட்பாளர் முருகன் உறுதி
குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு: பா.ஜ., வேட்பாளர் முருகன் உறுதி
ADDED : ஏப் 16, 2026 09:09 PM

அன்னூர்: 'அன்னூரின் தெற்கு பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்ப்பேன்,' என அவிநாசி தொகுதி பா.ஜ., வேட்பாளர் முருகன் தெரிவித்தார்.
மத்திய இணை அமைச்சரும், அவிநாசி தனி தொகுதி பா.ஜ., வேட்பாளருமான முருகன், அன்னூர் தெற்கு ஒன்றியத்தில், பொத்தியாம்பாளையம், பச்சாபாளையம், செந்தாம்பாளையம், பொன்னே கவுண்டர் புதூர் உள்ளிட்ட 20 கிராமங்களில் நேற்றுமுன்தினம் தேர்தல் பிரச்சாரம் செய்து ஓட்டு சேகரித்தார்.
பொத்தியாம் பாளையத்தில் அவருக்கு அ.தி.மு.க., பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வேட்பாளர் முருகனுக்கு கிரேன் வாயிலாக பிரம்மாண்டமான மாலை அணிவிக்கப்பட்டது.
பிரசாரத்தில் அவர் பேசுகையில், அன்னூரின் தெற்கு பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் சாலை வசதியை மேம்படுத்தவும் கூடுதலாக அரசு பஸ் இயக்கவும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சொந்த வீடு இல்லாத, ஏழை, எளிய மக்களுக்கு, தொகுப்பு வீடு மற்றும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க., ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர், என்றார்.
வேட்பாளர் முருகன், செட்டிபாளையம் முருகன் கோவிலில் வழிபாடு செய்தார்.
அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் சாய் செந்தில், பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் கணேசமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
