/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ., கவுன்சிலர் ஊழல் குற்றச்சாட்டால் பரபரப்பு
/
பா.ஜ., கவுன்சிலர் ஊழல் குற்றச்சாட்டால் பரபரப்பு
ADDED : ஏப் 30, 2025 12:30 AM
போத்தனூர், ; செட்டிபாளையம் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில், பா.ஜ., கவுன்சிலரின் ஊழல் குற்றச்சாட்டால், பரபரப்பு ஏற்பட்டது.
செட்டிபாளையம், பேரூராட்சி கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் தலைவர் ரங்கசாமி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது இரண்டாவது வார்டு கவுன்சிலர் (பா.ஜ.,) மதிவாணன்,'' ஒன்றாவது வார்டில் தீர்மானம் போடாமலே, சம்ப் கட்டப்பட்டுள்ளது.
''10வது வார்டில் சாலை பணி நடக்கிறது. அத்துடன் மழைநீர் வடிகால் பணியும் தீர்மானமின்றி மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஊழல் நடக்கிறது. கவுன்சிலர்கள் கூறுவது, மினிட் புத்தகத்தில் பதிவு செய்யப்படுவதில்லை,'' என தலைவர் ரங்கசாமியிடம் கூறினார்.
அப்போது ஐந்தாவது வார்டு கவுன்சிலர் காளிமுத்து, மதிவாணனை நோக்கி, ''இது போல் நீ பேசக்கூடாது. தலைவரிடம் தனியாக பேசவேண்டும்,'' என கூறினார்.
இதனால் இருவருக்குமிடையே, வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கூட்டம் முறையாக முடிக்கப்படாமலேயே, கவுன்சிலர்கள் வெளியேறினர்.
மதிவாணன் கூறுகையில், ''பேரூராட்சியில் ஆளுங்கட்சியினரின் வார்டுகளுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. தீர்மானம் கொண்டு வராமலேயே, பணி நடக்கிறது. இதில் ஊழல் நடக்கிறது. தலைவரிடம் கேள்வி கேட்டால் தி.மு.க., கவுன்சிலர் பிரச்னை செய்கிறார்,'' என்றார்.
தலைவர் ரங்கசாமியிடம் (தி.மு.க.,) கேட்டபோது, ''பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்னை உள்ளது. இதனை சீர்படுத்த மேல்நிலை தொட்டி, சம்ப் கட்டப்பட்டுள்ளது.
''இதில் எங்கே ஊழல் நடந்தது. சாலை போட்ட பின், மழைநீர் வடிகால் கட்டினால், சாலை சேதமடையும் என்பதால் அப்பணியையும் சேர்ந்து முடிக்கப்பட்டது.
''அனைத்து வார்டுகளுக்கும் தேவையான பணி செய்து தரப்படுகிறது,'' என்றார்.

