/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொண்டாமுத்துாரில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
/
தொண்டாமுத்துாரில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 11, 2024 01:49 AM

தொண்டாமுத்துார்;கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.,வை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் தொண்டாமுத்தூரில் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமை வகித்தார். இதில், நீட் விலக்கு, மது ஒழிப்பு, பொங்கலுக்கு 5000 ரூபாய் பணம், கல்வி கடன் ரத்து போன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.,வை கண்டித்து, கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு தி.மு.க., அல்வா கொடுத்ததாகக்கூறி, பா.ஜ.,வினர் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், ஒன்றிய தலைவர் பிரபு, மாநில ஊடகப்பிரிவு செயலாளர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், வசந்தராஜன் பேசுகையில், ''கடந்த தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் தமிழக முழுவதும் ஒரு பெட்டியை கொண்டு வந்து, ஊர் ஊராக பெட்டியில் மனுவை வாங்கி நாங்கள் வந்தவுடன் குறைகளை எல்லாம் நிறைவேற்றி விடியல் தருவோம் எனக்கூறியவர், வெற்றி பெற்ற பின் மக்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார். பா.ஜ., கடந்த தேர்தலில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. ஆனால், தி.மு.க., மக்களுக்கு அல்வா மட்டும் தான் கொடுத்துள்ளனர். பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஓட்டு கேட்க வருவார்கள். அப்போது, கடந்த முறை கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என கேள்வி கேளுங்கள்,''என்றார்.

