/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஐம்புலன்களை அடக்கினால் பேரின்பத்தை அடையலாம்'
/
'ஐம்புலன்களை அடக்கினால் பேரின்பத்தை அடையலாம்'
ADDED : செப் 23, 2024 12:21 AM

கோவை : ''ஐம்புலன்களை அடக்கி ஆண்டால், நாம் பேரின்ப நிலையை அடையலாம்,'' என்று புரட்டாசி மாத ஆன்மிக சொற்பொழிவில், ரமண சரணதீர்த்தர் நொச்சூர் சுவாமிகள் கூறினார்.
ராம் நகர் சத்தியமூர்த்தி சாலையிலுள்ள, ஸ்ரீ ஐயப்ப பூஜா சங்கத்தில், புரட்டாசி மாத ஆன்மிக சொற்பொழிவு நேற்று நடந்தது. அதில் அருணாச்சல அனுபவம் குறித்து, ஸ்ரீ ரமண சரணதீர்த்தர் நொச்சூர் சுவாமிகள் சொற்பொழிவாற்றியதாவது:
அன்னியமாக யாரையும் பார்க்காமல், ஆத்ம சொரூபமாகவே சகல ஜீவராசிகளையும் பார்க்க வேண்டும். அதுவே பகவானின் தரிசனம். அதன் வாயிலாக மனிதர்களாகிய அனைவரும் சமம் என்பதை நாம் உணருவோம். அப்போது ஒவ்வொரு ஜீவனக்குள்ளும், ஒரு ஆத்மா இருப்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
ஐம்புலன்களில் ஏதாவது ஒன்றுக்கு, நாம் அடிமையானால் நம் உடல் முழுக்க அதற்கு அடிமையாகி விடும். நாம் எந்த நல்லதொரு செயலை செய்ய முற்பட்டாலும், அதை அந்த ஒரு புலன் தடுத்து நிறுத்திவிடும்.
அதனால் நாம், ஐம்புலன்களையும் எப்போதும் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு தியானம் மிகவும் உதவியாக இருக்கும்.
அன்னியம் என்று, நம் உடலிலும் மனதிலும் ஏதுமில்லை. அனைத்தும் ஐம்புலன்களின் வாயிலாகவே உள்ளே நுழைகிறது. அதை நம் ஆத்மாவால் கட்டுப்படுத்தலாம். ஆத்மாவை தாண்டி அந்நியமாக எதுவும் நடக்காது. பிரணாயாமம், யோகம், போன்றவற்றால் நம் மனதை திடமாக வைக்கலாம்.
இதன் வாயிலாக, அழுக்காறு, பொறாமை, அகங்காரம், அது, இது என்ற அனைத்தும் நம்மை விட்டு விலகிவிடும். மங்களகரமான வார்த்தைகள் நம்முள் உதிக்கும். அப்போது மரணமில்லா, ஜனனமில்லா பேரின்ப நிலையை அடையலாம். அப்போது சப்த ஸ்வரங்களையும் உள்ளடக்கிய, ஓம் என்ற ஓங்காரப்பொருளான பிரணவத்தை, ஜெபிக்கத் தோன்றும்.
இவ்வாறு, அவர் சொற்பொழிவு நிகழ்த்தினார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.