/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொகுப்பு வீடு கட்டும் திட்டம் 3 ஆண்டுகளாக முடக்கம்
/
தொகுப்பு வீடு கட்டும் திட்டம் 3 ஆண்டுகளாக முடக்கம்
தொகுப்பு வீடு கட்டும் திட்டம் 3 ஆண்டுகளாக முடக்கம்
தொகுப்பு வீடு கட்டும் திட்டம் 3 ஆண்டுகளாக முடக்கம்
ADDED : ஜன 02, 2024 11:23 PM
அன்னுார்:அன்னுார் ஒன்றியத்தில், தொகுப்பு வீடு கட்டும் திட்டத்தில், மூன்று ஆண்டுகளாக ஒரு வீடு கூட ஒதுக்கப்படாததால், வீடு இல்லாத ஏழை எளிய மக்கள் தவிக்கின்றனர்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ளோருக்கு சொந்த வீடு இலவசமாக கட்டித்தர இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டம் 1990 முதல் செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டம் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்தில் 269 சதுர அடி கொண்ட கான்கிரீட் வீடு கட்டப்படுகிறது. ஒரு ஹால், படுக்கையறை, சமையலறை, கழிப்பறை ஆகியவை இதில் இடம்பெற்றிருக்கும். நான்கு தவணைகளாக பணம் வழங்கப்படும். வீடு கட்டும் போது, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 14 மூட்டை சிமென்ட், 320 கிலோ கம்பிகள் வழங்கப்படும். இதற்கான தொகை மொத்த தொகையான 2 லட்சத்து 75 ஆயிரத்தில் கழித்துக் கொள்ளப்பட்டு மீதித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்தத் திட்டத்தில் பயனாளிக்கு இது முதல் வீடாக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில், அன்னுார் ஒன்றியத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒருவருக்கு கூட வீடு ஒதுக்கப்படவில்லை.
இதுகுறித்து ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது :
காரே கவுண்டன் பாளையம், வடக்கலுார், கஞ்சப்பள்ளி, மசக்கவுண்டன் செட்டிபாளையம் உள்ளிட்ட பல ஊராட்சிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பல குடும்பங்கள் சொந்த வீடு இல்லாததால் ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள் வசிக்கின்றன.
அவர்கள் அரசு இலவச தொகுப்பு வீடு பெறுவதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக விண்ணப்பித்து வருகின்றனர். கிராம சபை கூட்டம், மாவட்ட கலெக்டரின் மனுநீதி நாள் முகாம் என அனைத்து முகாம்களிலும் மனு அளித்து வருகின்றனர். 2020-21ல் மட்டும், அன்னுார் ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சிகளுக்கும் சேர்த்து வெறும் 20 வீடுகள் ஒதுக்கப்பட்டன. அதன் பிறகு 21-- 22, 22--23, 23-24 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளில் ஒரு வீடு கூட ஒதுக்கப்படவில்லை.
அதேபோல் 300 சதுர அடியில் சோலார் மின் சக்தி உடன் கூடிய வீடு கட்டுவதற்கு பசுமை வீடு திட்டத்தில் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திலும் அன்னுார் ஒன்றியத்தில் ஒருவருக்கு கூட மூன்று ஆண்டுகளாக வீடு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த நிலமிருந்தும் வீடு கட்ட முடியாத நிலையில் உள்ளனர்.
மேலும் பலர் சொந்த இடமும் இல்லாமல் உள்ளனர். அரசு உடனடியாக அன்னுார் ஒன்றியத்தில், வீடு கட்ட தேவையான நிலம் உள்ளவர்களுக்கு தொகுப்பு வீடு கட்டவும், நிலமும் வீடும் இல்லாதவர்களுக்கு இலவச பட்டா அளித்து தொகுப்பு வீடு கட்டி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.