ADDED : செப் 18, 2026 06:12 PM
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா, இன்று துவங்குகிறது. பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலமான காரமடை அரங்கநாதர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமை விழாவும், நவராத்திரி விழாவும் வெகு விமர்சையாக நடத்தப்படும். நடப்பாண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா, இன்று துவங்க உள்ளது. அக்., 10ம் தேதி மஹாளய அமாவாசை விழாவும் நடக்கிறது.
அக்.,12ம் தேதி நவராத்திரி உற்சவம் விழா துவங்கவுள்ளது. அக். 20ம் தேதி சரஸ்வதி பூஜை, 21ம் தேதி விஜயதசமி, குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, அம்பு போடும் விழாவும் நடக்கவுள்ளன.
ஒவ்வொரு சனிக்கிழமையும் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். அதனால் பக்தர்கள் வரிசையாக சென்று பெருமாளை வழிபட, தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர், பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
