ADDED : ஏப் 24, 2025 10:30 PM
பொள்ளாச்சி;'பொள்ளாச்சி பொதுமக்கள், குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்,' என நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் கணேசன் அறிக்கை: பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்காக, ஆழியாறு மற்றும் பாலாறு சங்கமிக்கும் இடமான அம்பராம்பாளையத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து, தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரித்து நகரில் அமைந்துள்ள நீருந்து நிலையம் வாயிலாக, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ஆழியாறு அணையில் நீர்மட்டம், 120 அடியில் தற்போது, 64 அடியாக உள்ளது. திருமூர்த்தி அணையில் இருந்து வரக்கூடிய பாலாறு தண்ணீர் விவசாய நிலங்கள் வழியாக மண் கலந்து வருவதால் துவர்ப்பாக மாறியுள்ளது.
இதை குடிக்க பயன்படுத்துவதற்கு ஏதுவாக, தேவையான அளவு ஆலம் மற்றும் குளோரின் சேர்த்து சுத்திகரித்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. எனினும், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

