/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இ மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்... விளையாட்டா போச்சு...! போலீசாருடன் குற்றவாளி கண்ணாமூச்சி ஆட்டம்
/
'இ மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்... விளையாட்டா போச்சு...! போலீசாருடன் குற்றவாளி கண்ணாமூச்சி ஆட்டம்
'இ மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்... விளையாட்டா போச்சு...! போலீசாருடன் குற்றவாளி கண்ணாமூச்சி ஆட்டம்
'இ மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்... விளையாட்டா போச்சு...! போலீசாருடன் குற்றவாளி கண்ணாமூச்சி ஆட்டம்
ADDED : நவ 18, 2024 10:58 PM

கோவை ; 'இ மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வருவது கோவையில் அன்றாட நிகழ்வில் ஒன்றாகிவிட்டது.
கோவை மாநகரில் உள்ள பள்ளி, கல்லுாரி, ஓட்டல், மருத்துவமனை, விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கடந்த ஒரு மாதமாக 'இ மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன.
முதல்முறை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த போது பள்ளி நிர்வாகத்தினர் அச்சப்பட்டு பள்ளிக்கு விடுமுறை அளித்தனர். பின்னர், போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளிக்கு சென்று சோதனை செய்த போது, அது வதந்தி என தெரியவந்தது. இதையடுத்து, சில தினங்களுக்கு பிறகு மேலும் இரண்டு பள்ளிகளுக்கு 'இ மெயில்' மூலம் மிரட்டல் வந்தது. இதன் பின்னர், சில தனியார் மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் சென்றது. ஒரு கட்டடத்தில் விமான நிலையத்திற்கு மிரட்டல் இ மெயில் பறந்தது.
இந்நிலையில், ''பல்வேறு காரணங்களுக்காக இது போன்ற இமெயில்கள் அனுப்பப்படுகின்றன. இ மெயில் அனுப்பும் நபர்கள் வி.பி.என்., போன்ற தளங்களை பயன்படுத்துவதால் போலீசாருக்கு சவாலாக உள்ளது. அவற்றை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், பள்ளி, கல்லுாரி, நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு இது போன்ற இ - மெயில் வந்தால் அச்சப்படவேண்டாம். பதற்றம் அடைய வேண்டாம். வெடிகுண்டை கண்டுபிடித்து அதை செயலிழக்க வைக்கும் அளவிற்கு கோவை மாநகர போலீசில் உபகரணங்கள் உள்ளன. பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் உள்ளன. வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளனர். எனவே, வெடிகுண்டு இருந்தால் கூட நம்மால் அதை செயலிழக்க செய்ய முடியும். இது போன்ற போலி இ மெயில்களுக்கு அச்சப்படாமல், போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்களை பாதுகாக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்,'' என போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும், அவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும், குற்றவாளிகள் வி.பி.என்., பயன்படுத்துவதால் அதை 'டிரேஸ்' செய்வதில் சிக்கல் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், போலீசாரால் தங்களை நெருங்க முடியவில்லை என்ற தைரியத்தில் 'மீண்டும், மீண்டும்' 'இ மெயில்' வாயிலாக சிலர் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். முதல் முறை மிரட்டல் வந்த போது, பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது, பள்ளியில் சோதனை நடத்தப்பட்டது. அடுத்த முறை மிரட்டல் வந்த போது, பதற்றம் இல்லாமல் போனது, மூன்றாம் முறை இதே போல் நடந்த போது வதந்தி என நிர்வாகத்தினரே முடிவு செய்யும் நிலைக்கு வந்து விட்டனர். கடந்த வாரம் இதேபோல், இரு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. 'இ மெயிலை பார்த்த மருத்துவமனை நிர்வாகத்தினர் அதை பொருட்படுத்தாமல், தங்களின் அன்றாட நிகழ்வுகளை கவனித்தனர். பின்னர், மதியத்திற்கு மேல் தான் போலீசாருக்கே தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இது போன்ற போலி மிரட்டல்கள் வந்தால், நிர்வாகத்தினர் அதை அலட்சியப்படுத்த கூடாது, மெயில் கிடைத்த உடன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போலீசார் சோதனை செய்து முடிவு செய்வர். தாங்களாகவே முடிவு எடுப்பது ஆபத்தில் முடியவும் வாய்ப்புள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.