/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனின் தரம் உயர்கிறது! இனி, புதிய ரயில்களுக்கு 'பச்சைக்கொடி!'
/
போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனின் தரம் உயர்கிறது! இனி, புதிய ரயில்களுக்கு 'பச்சைக்கொடி!'
போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனின் தரம் உயர்கிறது! இனி, புதிய ரயில்களுக்கு 'பச்சைக்கொடி!'
போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனின் தரம் உயர்கிறது! இனி, புதிய ரயில்களுக்கு 'பச்சைக்கொடி!'
ADDED : செப் 23, 2024 12:17 AM

கோவை : போத்தனூர் ரயில் நிலையத்தின் வகைப்பாடு என்.எஸ்.ஜி., 4 ஆக உயர்கிறது என்பதால், ஏராளமான வசதிகள் மேம்படுத்தப்படுவதோடு, புதிய ரயில்கள் இனி, போத்தனூரில் இருந்தும் புறப்படும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
கோவை மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான, போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனை 'என்.எஸ்.ஜி., 4' பிரிவுக்குள் கொண்டு வருவது நிறைவேறியிருக்கிறது.
ரயில் நிலையங்களின் வகைப்பாடு, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வருவாயின் அடிப்படையில், மாற்றி அமைக்கப்படுகின்றன.
2017-18ம் ஆண்டில், போத்தனூர் ரயில் நிலையம் புறநகர் அல்லாத நிலையம் 5 (என்.எஸ்.ஜி., 5)என வகைப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது, என்.எஸ்.ஜி., 4 ஆக வகைப்பாட்டுக்கு உயர்த்த, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதையே அதிகாரப்பூர்வ அறிவிப்பாக எடுத்துக்கொள்ள முடியும் என்பதால், என்.எஸ்.ஜி., 4 என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதனால், போத்தனூர் ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, ரயில் நிலையம் விரிவடையவும், புதிய வண்டிகள் நிற்கவும், புதிய ரயில்கள் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக, போத்தனூர் ரயில் பயணிகள் சங்க தலைவர் முகமது ஷாஹிர் கூறுகையில், “கடந்த 2023---24ம் ஆண்டு, போத்தனூரில் இருந்து, 5.12 லட்சம் பேர் பயணித்துள்ளனர்; 10.42 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. போத்தனூர் ரயில் நிலையம் என்.எஸ்.ஜி., 4வது வகைப்பாட்டுக்கு மாற்றப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நீண்ட கால போராட்டத்துக்கு பலன் கிடைத்து, எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது,” என்றார்.
சேலம் கோட்ட ரயில் பயனாளர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் கூறியதாவது:
நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறியிருக்கிறது. இதனால், போத்தனூர் ரயில் நிலையம் விரிவுபடுத்தப்படும். ரயில்களைப் பராமரிக்கத் தேவையான 'பிட் லைன்', தனியாக நிறுத்துவதற்குத் தேவையான 'ஸ்டாப்லிங் லைன்', பராமரிப்புக் கூடம் ஆகியவை ஏற்படுத்தப்படும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், பயணிகளுக்கான கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
போத்தனூர் ரயில் நிலையத்தை, கோவையின் இரண்டாவது முனையமாக அறிவிக்கும்போது, இங்கு இருந்தே புதிய ரயில்கள் புறப்படும். தென்மாவட்டங்களுக்கு சில புதிய ரயில் சேவைகள் துவங்க வாய்ப்புள்ளது. வேறு பல ரயில்கள் இங்கு நின்று செல்லவும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
பிட் லைன், ஸ்டாப்லிங் லைன் போன்றவற்றுக்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.