/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனவிலங்கு தாக்கி சிறுவன் பலி; ரூ.10 லட்சம் நிவாரணம்
/
வனவிலங்கு தாக்கி சிறுவன் பலி; ரூ.10 லட்சம் நிவாரணம்
வனவிலங்கு தாக்கி சிறுவன் பலி; ரூ.10 லட்சம் நிவாரணம்
வனவிலங்கு தாக்கி சிறுவன் பலி; ரூ.10 லட்சம் நிவாரணம்
ADDED : ஆக 12, 2025 08:54 PM

வால்பாறை; வால்பாறை அருகே வனவிலங்கு தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தாருக்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகையாக வழங்கப்பட்டது.
வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட, வேவர்லி எஸ்டேட் பகுதியில், அசாம் மாநிலத்தை சேர்ந்த சொர்பத்அலி - ரோகமாலா தம்பதியரின் மகன் நுார்சல்ஹக், 8, நேற்று முன்தினம் மாலை, 6:45 மணிக்கு பால் வாங்க சென்ற போது, வனவிலங்கு தாக்கி இறந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பார்வையிட்டனர்.
வால்பாறை அரசு மருத்துவமனையில் நேற்று காலை பிரேத பரிசோதனை நடந்தது. சிறுவனை கடித்து கொன்றது சிறுத்தையா அல்லது கரடியா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதனிடையே, வனவிலங்கு தாக்கி உயிரிழந்த சிறுவனின் வீட்டிற்கு நேற்று மாலை சென்று, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, அரசு சார்பில், 10 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகையை குடும்பத்தினரிடம் வழங்கினார். பொள்ளாச்சி சப்- கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, டி.எப்.ஓ., தேவேந்திரகுமார்மீனா, நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணா ஆகியோர் உடனிருந்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'வேவர்லி எஸ்டேட்டில் வனவிலங்கு தாக்கி சிறுவன் இறந்த இடத்தில், வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா வைக்கப்படும். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை, மாலை 6:00 மணிக்கு மேல் தனியாக வெளியில் செல்ல அனுமதிக்கூடாது. குறிப்பாக, தொழிலாளர்கள் குறுக்கு வழித்தடத்தில் தனியாக நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.
5 ஆண்டில் 14 பேர் பலி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரண்டு வனச்சரகங்களில், கடந்த ஐந்து ஆண்டுகளில் யானை தாக்கி 5 பேர், சிறுத்தை தாக்கி நான்கு சிறுவர்கள், கரடி தாக்கி இருவர், காட்டுமாடு தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். விஷக்குளவி தாக்கி ஒருவரும் இறந்துள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.

