/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடுப்பணைகளில் தடை மீறி... ஆனந்த குளியல்! கடும் நடவடிக்கை அவசியம்
/
தடுப்பணைகளில் தடை மீறி... ஆனந்த குளியல்! கடும் நடவடிக்கை அவசியம்
தடுப்பணைகளில் தடை மீறி... ஆனந்த குளியல்! கடும் நடவடிக்கை அவசியம்
தடுப்பணைகளில் தடை மீறி... ஆனந்த குளியல்! கடும் நடவடிக்கை அவசியம்
ADDED : மே 09, 2024 10:55 PM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் பவானி ஆறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில், குளிக்க தடை விதித்தும் அத்துமீறி ஆபத்தை உணராமல் இளைஞர்கள், பொதுமக்கள் பலர் ஆனந்த குளியல் போடுகின்றனர். கடந்த 2 வாரங்களில் 3 குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் சாமன்னா வாட்டர் பம்ப் ஹவுஸில் இருந்து, மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது. அதன் அருகில், திருப்பூர் நான்காம் குடிநீர் திட்டத்திற்கும் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
இந்த இடங்களுக்கு அருகில், பொதுப்பணி துறை சார்பில் ரூ.24 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. பணிகள் நடந்து வரும் நிலையில் தடுப்பணை கட்டுமானம் முடிவடைந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால், அப்பகுதியை நீச்சல் குளம் போல் நினைத்து ஆபத்தை உணராமல், மக்கள், கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் வந்து குளித்து வருகின்றனர். நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிகளுக்கு சென்றால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
அதே போல் பில்லுார் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டால், நீர் வரத்து அதிகரித்து, வெள்ளத்தில் மக்கள் அடித்து செல்லும் நிலையும் ஏற்படும்.
எச்சரிக்கை பலகையால் பயனில்லை
மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் இப்பகுதி யில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் ''பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ அல்லது வேறு காரணங்களுக்காக ஆற்றினுள் இறங்கக்கூடாது. மீறினால் சட்டப்படி தண்டிக்கப்படுவீர்கள்,'' என குறிப்பிடப்பட்டுள்ளது. எச்சரிக்கை பலகை வைத்ததோடு சரி, நகராட்சி நிர்வாகம் சார்பில் குளிப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதே போல் தேக்கம்பட்டிக்கு அருகே உள்ள சமயபுரம் பகுதியில் மின்சாரம் தயாரிப்பதற்காக, பவானி ஆற்றின் குறுக்கே மின்கதவணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கதவணையில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதிலும் இளைஞர்கள், பொதுமக்கள் ஆபத்தை அறியாமல் குளித்து வருகின்றனர்.
இதனிடையே இதன் அருகில் உள்ள உப்பு பள்ளம் பகுதியில் கடந்த ஏப்.26ம் தேதி பவானி ஆற்றில் குளித்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த இளைஞர் ஆழமான பகுதிக்கு சென்று நீச்சல் தெரியாமல் மூழ்கி உயிரிழந்தார். கடந்த 6ம் தேதி சிறுமுகை அருகே பவானி ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள், சீளியூர் குட்டையில் மூழ்கி 14 வயது சிறுமி என ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து, உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க நகராட்சி நிர்வாகம், போலீசார் இணைந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் கூறியதாவது:-
பவானி ஆற்றின் ஆபத்தான பகுதிகள் என, வெள்ளிப்பாளையம் பாயிண்ட் 1, 2, 3, சிறுமுகை, ஆலாங்கொம்பு, ராமர் கோவில், அம்மன் பழத்தோட்டம், வச்சினம்பாளையம், வேடர் காலனி, ஊமபாளையம், கல்லார் கார்டன், துாரி பாலம், ரயில்வே கேட், எஸ்.எம். நகர் வாட்டர் டேங், சமயபுரம் செக்டேம், வனபத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை பம்ப் ஹவுஸ், குண்டுகல் துறை, விளாமரத்துார் என 19 இடங்கள் கண்டறியப்பட்டு, 24 மணி நேரமும் லைப் காட்ஸ் பிரிவு போலீசார் ரோந்து சென்று வருகின்றனர்.
தற்போது சாமன்னா வாட்டர் ஹவுஸ் பகுதியையும் ஆபத்தான பகுதியாக கருதி 2 மணி நேரத்திற்கு ஒரு முறை அங்கு ரோந்து செல்கிறோம். குளிப்பவர்களை வெளியேற்றுகின்றோம். அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.---