/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செங்கல் அல்லது 'பிளை ஆஷ்'; வீடு கட்ட எது சிறந்தது?
/
செங்கல் அல்லது 'பிளை ஆஷ்'; வீடு கட்ட எது சிறந்தது?
செங்கல் அல்லது 'பிளை ஆஷ்'; வீடு கட்ட எது சிறந்தது?
செங்கல் அல்லது 'பிளை ஆஷ்'; வீடு கட்ட எது சிறந்தது?
ADDED : ஏப் 26, 2025 12:21 AM

கட்டுமான சந்தையில் கிடைக்கும் சிமென்ட், பலமாடி கட்டடங்களின் உறுதிக்கு உகந்ததாக இருக்குமா?
-சுந்தர், சுங்கம்.
கட்டுமான சந்தையில், 15 வகையான சிமென்ட்கள் கிடைக்கின்றன. அவை ஒவ்வொன்றும் தனித்தனி குணங்களோடு, குறிப்பிட்ட வகை பயன்பாட்டிற்கு உகந்ததாக உள்ளன.
அவற்றின் பயன்பாடுகளை புரிந்து கொண்டு, சிமென்ட் தேர்வு செய்து பயன்படுத்தும்போது அது உறுதியானதாகவும், வலிமையானதாகவும் இருக்கும்.
பொதுவாக சந்தையில், 53 கிரேடு சிமென்ட் கிடைக்கிறது. 53 கிரேடு என்பது அதன் அழுத்த வலிமையை குறிக்கிறது.
நாங்கள் கட்டடம் கட்டும் இடம் களிமண் பகுதியாகவும், நான்கு அடி ஆழத்தில் நிலத்தடி நீர் கசிந்தும் வருகிறது. எங்களது கட்டடத்தின் அடித்தளத்தை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்று ஆலோசனை கூறவும்.
-மோகன்ராஜ், ஆலாந்துறை.
நீங்கள் அமைக்கும் கட்டடத்தின் பூமியின் தாங்கும் திறன் மற்றும் நிலத்தடி நீரின் தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து, சரியான பொறியாளர்களை கொண்டு கட்டடத்தின் கட்டுமான வடிவமைப்பை செய்து கொண்டு கட்டுவது மிக சிறந்தது.
நிலத்தடி நீர் அதிகமாக கசியும் பகுதிகளில், அடித்தளத்தின் கான்கிரீட் வெளிப்புற பகுதிகளில் சரியான முறையில் சிறு துளைகளை அடைத்து, அதன் மீது 'வாட்டர் புரூபிங்' அல்லது தார்(பிட்டுமன் கோட்டிங்)கொண்டு, முழுவதுமாக நீர் புகாமல் செய்து கொண்டால், கட்டடத்தின் அடிப்பகுதி மிகவும் வலிமையானதாகவும், பிற்காலங்களில் பாதிப்புக்கள் வராமலும், தடுத்துக் கொள்ளலாம்.
செங்கல் அல்லது பிளை ஆஷ்- இவற்றில் எது சரியானது; கட்டுமானத்திற்கு எதை பயன்படுத்தலாம்?
-முரளி, சுந்தராபுரம்.
இரண்டுமே சிறந்ததுதான். ஆனால், செங்கலை விட பிளை ஆஷ் கல் கொண்டு கட்டுவது கட்டடத்தின் வலிமையை அதிகரிக்கும். தண்ணீரால் வரும் அரிப்புத்தன்மை போன்ற பிரச்னைகளை, பிளை ஆஷ் கல்கொண்டு கட்டுவதன் மூலம் தடுக்கலாம். இது செங்கலை விட விலையும் குறைவு.
வீட்டு மொட்டை மாடியில் கூலிங் டைல்ஸ் பயன்படுத்தலாமா?
-சுதா, பேரூர்.
கூலிங் டைல்ஸ் பயன்படுத்துவன் வாயிலாக, வெப்பம் வீட்டின் உட்புறம் வராமல் தடுக்கலாம். மொட்டை மாடியில் ஒட்டும் பொழுது, டைல்ஸின் இடைவெளி, 3 மி.மீ., விட்டு ஒட்டி, அந்த இடைவெளியில்எப்பாஸ்சி மூலம் நிரப்ப வேண்டும். இது, நீர் உட்புகாமல் நீண்ட நாட்கள் இருக்கும்.
எங்கள் வீட்டில் மர ஜன்னல்கள் பழுதாகி விட்டது. அதை அகற்றிவிட்டு யூ.பி.வி.சி., ஜன்னல் பொருத்த முடியுமா?
-அருண், காரமடை.
தாராளமாக பொருத்தலாம். பழைய ஜன்னல் 'கிளாம்ப்' உள்ள இடத்தை உடைத்து எடுத்து, பழைய ஜன்னலை அகற்றிவிட்டு ஜன்னல் அளவுக்கு ஏற்பபூச்சு பூசி பினிஷிங் செய்து, யூ.பி.வி.சி., ஜன்னலை பொருத்திக் கொள்ளலாம்.
நாங்கள் வீடு கட்டி, 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. மொசைக் புளோரிங் போட்டு உள்ளோம். அதை உடைத்து மேல் புளோரிங் போடலாமா?
-வசந்தகுமார், ஈச்சனாரி.
மொசைக் புளோரிங்கை உடைத்து விட்டு போடலாம் அல்லது உடைக்காமல் அப்படியே அதன் மேல் பேஸ்ட் உபயோகித்தும் டைல்ஸ் ஒட்டலாம். அப்படி ஒட்டும் பொழுது வீட்டில் உள்ள அனைத்து கதவுகளையும், அந்த கனத்திற்கு ஏற்ப வெட்டி, மீண்டும் கதவுகளை பொருத்த வேண்டும்.பழைய மொசைக் புளோரிங் மட்டமாக இருக்கும் பட்சத்தில், இந்த முறையை பயன்படுத்தலாம். இந்த முறையை பயன்படுத்துவதற்கு, மார்க்கெட்டில் பிரத்யேகமாக டைல்ஸ் பேஸ்ட் உள்ளது. அதை பயன்படுத்திக் டைல்ஸ் ஒட்டலாம்.
-மணிகண்டன்,
பொருளாளர், கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்(காட்சியா)