/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடைந்த கம்பு... கிழிந்த ஓலை... சரியும் சாரம்... ஆட்டம் காணும் கல்லார் இ--பாஸ் சோதனை சாவடி
/
உடைந்த கம்பு... கிழிந்த ஓலை... சரியும் சாரம்... ஆட்டம் காணும் கல்லார் இ--பாஸ் சோதனை சாவடி
உடைந்த கம்பு... கிழிந்த ஓலை... சரியும் சாரம்... ஆட்டம் காணும் கல்லார் இ--பாஸ் சோதனை சாவடி
உடைந்த கம்பு... கிழிந்த ஓலை... சரியும் சாரம்... ஆட்டம் காணும் கல்லார் இ--பாஸ் சோதனை சாவடி
ADDED : நவ 13, 2024 08:12 AM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே கல்லார் இ- பாஸ் சோதனை சாவடியில், அமைக்கப்பட்டிருக்கும் மேற்கூரை உடைந்த கம்பு, கிழிந்த ஓலைகளுடன் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது.
நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் முறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து கடந்த மே மாதம் 7ம் தேதி முதல் இ- பாஸ் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்திற்குள் செல்லும் 13 வழித்தடங்களிலும் இ-பாஸ் சோதனை நடந்து வருகிறது.
கோவையில் இருந்து நீலகிரி செல்லக்கூடிய சாலையில், மேட்டுப்பாளையம் அருகே கல்லார் தூரிப்பாலத்தில் இ- பாஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதில் நீலகிரி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய வாகனங்கள் இ-பாஸ் பெற்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
இ- பாஸ் பெறாத வாகனங்களை நிறுத்தி, இ-பாஸ் பெறுவதற்கான வழிமுறைகளை சொல்லி, வருவாய் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி, இ-பாஸ் எடுத்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
இச்சோதனை சாவடியில் குன்னூர் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். வாகனங்களில் போதை பொருள் உள்ளதா, ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா, வாகனங்களை யாரவது திருடி வந்துள்ளனரா, சந்தேகம்படும்படியான நபர்கள் உள்ளனரா, என தீவிர சோதனையில் போலீசார் ஈடுபடுகின்றனர். இதனால் இ- பாஸ் சோதனை சாவடியில் எப்போதும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை உள்ளது.
இப்படிபட்ட சூழ்நிலையில் வாகனங்கள், சுற்றுலா பயணிகள், இ-பாஸ் சோதனை அதிகாரிகள், போலீசார் என அனைவரும் இ- பாஸூக்காக அமைக்கப்பட்டுள்ள, ஓலை கொட்டகையின் கீழே நின்று தான் பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் அந்த மேற்கூரையின் நிலையை கண்டு பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், இ- பாஸ் சோதனை சாவடியில், அதிக கூட்டம், சில சமயங்களில் சர்வர் முடக்கம் போன்றவற்றால், சோதனை சாவடியிலேயே அரை மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்படி இருக்கையில் சோதனை சாவடியின் மேற்கூரைகள் காற்றுக்கோ, மழைக்கோ எப்போது வேண்டுமானும் கீழே விழுந்து, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது' என்றனர்.
அடிப்படை வசதிகள் இல்லை
சோதனை சாவடியில் ஒரே ஒரு கழிவறை தான் உள்ளது. ஆண், பெண் என இருபாலரும் இதைத் தான் உபயோகிக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. அவசர மருத்துவ தேவைக்கு என எந்த ஏற்பாடும் இல்லை.
இங்குள்ள அதிகாரிகள், போலீசார் மற்றுமின்றி, சுற்றுலா பயணிகளும் அடிப்படை வசதி இல்லாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.