/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாயில் உடைப்பு; 25 அடி உயரத்துக்கு பீறிட்ட குடிநீர் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் விரயம்
/
குழாயில் உடைப்பு; 25 அடி உயரத்துக்கு பீறிட்ட குடிநீர் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் விரயம்
குழாயில் உடைப்பு; 25 அடி உயரத்துக்கு பீறிட்ட குடிநீர் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் விரயம்
குழாயில் உடைப்பு; 25 அடி உயரத்துக்கு பீறிட்ட குடிநீர் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் விரயம்
ADDED : மே 24, 2025 02:46 AM

மேட்டுப்பாளையம்:திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தன போக்கால், குடிநீர் குழாய் பெரிய அளவில் உடைந்து, 25 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதனால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணானது.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து, திருப்பூர் மாநகராட்சிக்கு, மூன்றாவது குடிநீர் திட்டத்துக்கு, ராட்சத இரும்பு குழாய் வழியாக குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு, 19 கோடியே, 60 லட்சம் லிட்டர் தண்ணீர் பவானி ஆற்றில் இருந்து எடுத்து பம்பிங் செய்யப்படுகிறது. குழாய் பதிக்கும்போது, இரண்டு இரும்பு குழாய்கள் இணைக்கும் இடத்தில் வெல்டிங் செய்யப்பட்டது. மேலும் குழாயில் தண்ணீரை நிரப்பி அழுத்தம் கொடுத்து எங்கே ஏதேனும் தண்ணீர் கசிவு உள்ளதா என சோதனை செய்த பின்பு, அடுத்தடுத்து இரும்பு குழாய்கள் பதித்து வெல்டிங் செய்யப்பட்டது.
தண்ணீர் பம்பிங் செய்யும் பொழுது மின்தடை ஏற்பட்டால், குழாயில் உடைப்பு ஏற்படாமல் இருக்க, பல்வேறு இடங்களில் ஏர்வால்வு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த தொட்டியின் மேல் பகுதியில் கான்கிரீட் ஸ்லாப்பால் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் நடூர் பாலம் அருகே இக்குடிநீர் குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டு, சிறிதளவு தண்ணீர் வெளியேறியது. இது குறித்து கடந்த வாரம் தினமலரில் போட்டோவுடன் செய்தி வெளியானது. அப்போதே திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள், தண்ணீர் பம்பிங் செய்வதை நிறுத்திவிட்டு, உடைப்பை சரி செய்து இருந்தால், பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு இருக்காது. ஆனால் அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் குழாய் உடைப்பை சரி செய்யாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம், 3:30 மணியளவில் தண்ணீர் வெளியேறி வந்த இடத்தில், அழுத்தம் அதிகரித்து குழாயில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் பீய்ச்சி அடித்தது.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் கூறியதாவது: தண்ணீர் வெளியேறி வந்த இடத்தில், பூமிக்குள் இருந்து முதலில் காற்று வேகமாக வந்தது. சத்தம் கேட்டு வந்து பார்த்த போது, சிறிது நேரத்தில் விசில் சத்தம் வந்தது. அதை தொடர்ந்து வெடிச்சத்தத்துடன் கல்லும், மண்ணும் கலந்த தண்ணீர், 25 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்தது. பத்து நிமிடத்துக்கும் மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதனால் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. சாலையும் சேதம் அடைந்தது.
இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.