/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெண்கலம் வென்ற ரத்தினம் கல்லுாரியின் 'மாணிக்கம்'
/
வெண்கலம் வென்ற ரத்தினம் கல்லுாரியின் 'மாணிக்கம்'
ADDED : பிப் 12, 2025 12:11 AM

கோவை; தேசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்று, ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி மாணவி பெருமை சேர்த்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில், 38வது இந்திய தேசிய விளையாட்டு போட்டிகள், 'பசுமை விளையாட்டுகள்' என்ற பெயரில் நடந்தது. 28 மாநிலங்கள், எட்டு யூனியன் பிரதேசங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், களரிபயட்டு என்ற பாரம்பரிய தற்காப்பு கலை போட்டி, ஹரித்வாரில் நடந்தது. நான்கு நிலைகளுடன், 10 துணைப் பிரிவுகளாக நடைபெற்ற உருமி வீசல் போட்டியில், 19 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டிக்காக, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம், 11 போட்டியாளர்களை தேர்ந்தெடுத்தது.
அந்தவகையில், கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, உளவியல் துறையில் இரண்டாம் ஆண்டு மாணவி ஸ்ருதி, முதல் முறையாக, 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில், மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா, வெண்கல பதக்கம் வழங்கி பாராட்டினார். தனது முதல் தேசிய விளையாட்டு போட்டியிலேயே மூன்றாவது இடம் பிடித்து ஸ்ருதி, ரத்தினம் கல்லுாரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
ரத்தினம் கல்விக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம், கல்லுாரி முதல்வர் பாலசுப்ரமணியன், துணை முதல்வர் சுரேஷ், பேராசிரியர்கள், மாணவர்கள் ஸ்ருதியை பாராட்டினர்.