/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலாற்றில் தடுப்பணை கட்டி மழைநீரை சேமிக்கணும்! சப் - கலெக்டரிடம் மக்கள் வலியுறுத்தல்
/
பாலாற்றில் தடுப்பணை கட்டி மழைநீரை சேமிக்கணும்! சப் - கலெக்டரிடம் மக்கள் வலியுறுத்தல்
பாலாற்றில் தடுப்பணை கட்டி மழைநீரை சேமிக்கணும்! சப் - கலெக்டரிடம் மக்கள் வலியுறுத்தல்
பாலாற்றில் தடுப்பணை கட்டி மழைநீரை சேமிக்கணும்! சப் - கலெக்டரிடம் மக்கள் வலியுறுத்தல்
ADDED : அக் 28, 2024 11:42 PM

பொள்ளாச்சி : 'பொள்ளாச்சி, சிங்காநல்லுார் அருகே பாலாற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, சப் - கலெக்டரிடம் மக்கள் மனு கொடுத்து வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்தார்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பட்டீஸ்வரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட நஞ்சேகவுண்டன்புதுாரில், ஏற்கனவே இருந்த தொடக்கப் பள்ளி அருகே ஒரு அங்கன்வாடி மையம் கடந்த, ஏழு ஆண்டுகளுக்கு முன் வரை இருந்தது.
அக்கட்டடம் இடிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதுவரை புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டப்படவில்லை.தற்போது ஊரில் உள்ள மாகாளியம்மன் கோவில் அருகே, வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி இயங்குகிறது.
இக்கட்டடத்தில் குழந்தைகளுக்கு போதுமான வசதிகளும், பாதுகாப்பும் இல்லாத நிலை இருந்து வருகிறது.ஏற்கனவே இருந்த இடத்திலேயே அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும்.
கழிவை அகற்றுங்க!
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், விநாயகர் கோவில் முன்புள்ள காலியிடத்தில் நாள்தோறும் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள், மருத்துவ கழிவுகள் தேங்கி கிடக்கிறது. அவை முறையாக அகற்றப்படாமல், மேலும், கழிவுகள் கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு தொற்று நோய்கள் பரவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மருத்துவமனை வளாகத்திலேயே சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மருத்துவமனை வளாகத்தில் தேங்கும் கழிவுகளை உடனுக்கு உடன் அகற்ற வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பஸ் இயக்குங்க
அம்புவில் பழங்குடியினர் மலைவாழ் மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
வே. காளியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கே.பி.எம்., காலனி, காக்காகொத்திப்பாறை, பாண்டியன்பதி, வெப்பரை, முதலியார்பதி, ஆத்துபாலம் ஆகிய கிராமங்களில் அதிகளவு மக்கள் வசிக்கின்றனர்.
இங்கு வசிக்கும் மக்கள், ஆனைமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். மேலும், மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரும் வெளியூர் சென்று வருவதால், அவர்கள் வீடு திரும்ப இரவு நேரமாகிவிடுகிறது.
இப்பகுதிக்கு, காலை, 7:30 மணி, 10:20 மற்றும், மதியம், 2:40 மணி, மாலை, 5:30 மணி ஆகிய நேரங்களில் மட்டுமே பஸ் வசதி உள்ளது. எனவே, வெளியூர் வேலைக்கு சென்று வருவோர், மாலை, 5:30 மணிக்குள் வர இயலாது. பஸ் வசதி இல்லாமல், இரவு நேரத்தில் மிக தொலைவில் இருந்து நடந்தே வர வேண்டிய சூழலும் உள்ளது. இதில், பெண்கள் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே, இரவு, 8:00 மணி வரை கூடுதல் பஸ் சேவையை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விவசாயிகள் மனு
சிங்காநல்லுார் விவசாயிகள், பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
சிங்காநல்லுார் கிராமத்தின் வழியே செல்லும் பாலாற்றில், மழை காலங்களில் மட்டும் நீர் வரத்து உள்ள நீரோடையாக உள்ளது. பி.ஏ.பி., திட்டம் துவங்குவதற்கு முன், எட்டு முதல், 10 மாதம் வரை பாலாற்றில் நீர் வரத்து இருந்தது. ஆனால், திட்டம் துவங்கப்பட்டது முதல், பாலாற்றின் நீரானது பாசன பகுதிக்கு மடை மாற்றம் செய்யப்பட்டது. இதனால், சிங்காநல்லுார் பகுதி மழைக்காலங்களில் மட்டும் நீர்வரத்துள்ள ஓடையாக மாறிவிட்டது.
இதன் விளைவாக இப்பகுதி விவசாயத்துக்கு போதிய பாசன வசதியின்றி, ஆழ்துளை கிணறை நம்பியுள்ளது. விவசாயம் மட்டுமின்றி கால்நடை வளர்ப்போர், பொதுமக்களின் அன்றாட நீர்தேவை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.
கடந்த, 2ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில், சிங்காநல்லுார் வழியாக செல்லும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைத்து மழை நீரை சேமித்து, இப்பகுதியில் நிலத்தடி நீரை செறிவூட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

