/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஏர்ஹாரன்களால் மக்களிடம் பதற்றம்! :உரிமம் ரத்து செய்ய கோரிக்கை
/
பஸ் ஏர்ஹாரன்களால் மக்களிடம் பதற்றம்! :உரிமம் ரத்து செய்ய கோரிக்கை
பஸ் ஏர்ஹாரன்களால் மக்களிடம் பதற்றம்! :உரிமம் ரத்து செய்ய கோரிக்கை
பஸ் ஏர்ஹாரன்களால் மக்களிடம் பதற்றம்! :உரிமம் ரத்து செய்ய கோரிக்கை
UPDATED : நவ 04, 2025 12:57 AM
ADDED : நவ 04, 2025 12:29 AM

கோவை:கோவையில் ஏர்ஹாரன் பொருத்தியுள்ள பஸ்கள், லாரிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் பெயரளவுக்காவது நடவடிக்கை எடுத்து வந்த, வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், இப்போதெல்லாம் கண்டுகொள்வதே கிடையாது என, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் வாகன சட்டங்களின்படி, 70 டெசிபலுக்கு குறைவான ஹாரன்களை மட்டுமே, வாகனங்களில் பயன்படுத்த வேண்டும். ஆனால் கோவையிலிருந்து, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சத்தி, திருப்பூர் செல்லும் தனியார் பஸ்களில், 120 முதல் 180 டெசிபல் வரையிலான ஏர்ஹாரன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பஸ்களிலும் காதை கிழிக்கும், விதவிதமான சப்தத்தை ஏற்படுத்துவதற்காக, கட்அவுட்டர்கள் (ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு நவீன ஸ்விட்ச்) பயன்படுத்தப்படுகிறது. இதை இடத்துக்கு தகுந்தாற்போல் டிரைவர்கள் மாற்றி, அதிக சப்தத்தை ஏற்படுத்துகின்றனர்.
ஏர்ஹாரனை அடித்துக்கொண்டே, பஸ் வேகமாக செல்லும் போது, பாதசாரிகள் பதை பதைத்துப்போய், சாலையில் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.
பதறும் பெண்கள் இரு சக்கர வாகனங்களை, சாலையில் மெதுவாக இயக்கி செல்லும், வயோதிகர்கள், பெண்களை பதற வைக்கும் வகையில், பின்னால் துரத்தும் பஸ்கள், ஏர்ஹாரன்களை அலற விடுகின்றனர்.
ஏர்ஹாரன்கள் பயன்படுத்துவதற்கு கோவை மாவட்ட நிர்வாகமும், வட்டார போக்குவரத்துத்துறையும், போக்குவரத்து போலீசாரும் தடை விதித்துள்ள சூழலில், தொடர்ந்து தனியார் பஸ்களில் ஏர்ஹாரன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், லாரிகள், அரசு பஸ்களிலும் பயன்படுத்துவதுதான். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
காளப்பட்டியை சேர்ந்த செங்கதிர் செல்வி கூறுகையில், ''ஏர் ஹாரன்களிலிருந்து வெளியேறும் அலறல் சப்தம், சாலைகளில் நடந்து செல்பவர்களை, அஞ்சி நடுங்க வைக்கிறது. செவிப்பறை கடுமையாக பாதிக்கப்படுகிறது,'' என்றார்.
செய்ய வேண்டியதென்ன? ஏர்ஹாரன் பயன்பாட்டை தவிர்க்க, தனியார் பஸ் உரிமையாளர்கள், அரசு போக்குவரத்து கழக டிப்போ மேலாளர்கள், லாரி மற்றும் கனரக வாகன உரிமையாளர்களை எச்சரிக்க வேண்டும்.
அதையும் மீறினால், வாகனப் பதிவு சான்று ரத்து செய்வது குறித்து, நோட்டீஸ் வழங்க வேண்டும். தவிர, உரிய கால அவகாசத்துக்கு பின், ரத்து செய்வதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
ஏர்ஹாரனால் சாலையில் சத்தம்
கலெக்டர் கூட்டத்தில் 'அமைதி'
நுகர்வோர் அமைப்பு நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'மாதந்தோறும் நடைபெறும் சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில், விபத்து, உயிர் பலி குறித்து விவாதிக்கப்படுகிறது. ஆனால் ஏர்ஹாரன் பிரச்னை குறித்து விவாதிக்கப்படுவதில்லை. இது குறித்து, கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்' என்றார். மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் விஸ்வநாதனிடம் கேட்டதற்கு, ''ஏர் ஹாரன் குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குழு ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதிப்பர். மேல் நடவடிக்கைக்கு, கலெக்டருக்கு பரிந்துரை செய்வோம்,'' என்றார்.
'வயோதிகத்துக்கு முன்பே
கேட்கும் திறன் பாதிக்கப்படும்'
காது மூக்கு தொண்டை அறுவைசிகிச்சைடாக் டர் அரவிந்தன் கூறியதாவது: 100 லிருந்து 120 டெசிபல் அளவுக்கு, ஏர்ஹாரன் சப்தத்தை தொடர்ந்து கேட்டால், உட்செவியில் ஹேர்செல்கள் ஒவ்வொன்றாக அழியும். அப்போது காது கேட்கும் திறன் படிப்படியாக குறையும். வயோதிகத்துக்கு முன்பே காதுகேளாத நிலை ஏற்படும். செவித்திறன் கருவி பயன்படுத்தியே காது கேட்கமுடியும். அதிக சப்தத்தை விட்டு, விட்டு கேட்போருக்கு ஒற்றைத்தலைவலியும், மூளை நரம்புகளில் பாதிப்புகளும் ஏற்படலாம். கர்ப்பிணிகளுக்கு இனம்புரியாத அதிர்வுகள் ஏற்படும். கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு, சூழலுக்கு ஏற்ப பாதிப்பு ஏற்படலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

