/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உபாசி வரை வழக்கம்போல் பஸ் இயக்கம்! பேச்சு வார்த்தையில் உடன்பாடு
/
உபாசி வரை வழக்கம்போல் பஸ் இயக்கம்! பேச்சு வார்த்தையில் உடன்பாடு
உபாசி வரை வழக்கம்போல் பஸ் இயக்கம்! பேச்சு வார்த்தையில் உடன்பாடு
உபாசி வரை வழக்கம்போல் பஸ் இயக்கம்! பேச்சு வார்த்தையில் உடன்பாடு
ADDED : செப் 02, 2025 08:57 PM
வால்பாறை; வால்பாறை, சின்கோனா(டான்டீ) ரயான்டிவிஷன் மாதா கோவில் பிரிவிலிருந்து, உபாசி வரை 2 கி.மீ.,துாரம் சாலை சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது.
இந்நிலையில் சின்கோனா ரயான்டிவிஷனுக்கு இயக்கப்படும் அரசு பஸ், சில நாட்களாக இரண்டு முறை மட்டுமே உபாசிக்கு இயக்கப்பட்டது.
இதனால், அதிருப்தியடைந்த மக்கள் கடந்த மாதம், 31ம் தேதி, பஸ்சை சிறைபிடித்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என, நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்ததன் பேரில், மக்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், இது தொடர்பான பேச்சு வார்த்தை வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தில் நடந்தது. இதில், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, தி.மு.க. நகர செயலாளர் சுதாகர், கிளை மேலாளர் ராமமூர்த்தி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பேச்சு வார்த்தையில், நகராட்சி சார்பில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அது வரை வழக்கம் போல் உபாசிக்கு ஐந்து முறை பஸ் இயக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், 'ரயான்டிவிஷன் செல்லும் ரோட்டில் மாதா கோவில் சந்திப்பிலிருந்து உபாசி வரை, இரண்டு கி.மீ., துாரம் உள்ள சாலை, கரடு, முரடாக உள்ளதால், பஸ்கள் சென்று வருவதில் சிரமம் உள்ளது.
இது போன்ற வழித்தடங்களில் பஸ் இயக்குவதால், அடிக்கடி 'லீப்' கட்டாகி பஸ் பழுதடைந்துவிடுகிறது. ரோட்டை சீரமைத்துக்கொடுத்தால் பஸ்கள் சென்று வருவதில் சிரமம் இருக்காது. பேச்சுவார்த்தையில் ரோட்டை சீரமைப்பதாக நகராட்சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது,' என்றனர்.