/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ்களின் பக்கவாட்டில் தடுப்புச் சட்டம்; அனைத்து பஸ்களிலும் அவசியம்
/
பஸ்களின் பக்கவாட்டில் தடுப்புச் சட்டம்; அனைத்து பஸ்களிலும் அவசியம்
பஸ்களின் பக்கவாட்டில் தடுப்புச் சட்டம்; அனைத்து பஸ்களிலும் அவசியம்
பஸ்களின் பக்கவாட்டில் தடுப்புச் சட்டம்; அனைத்து பஸ்களிலும் அவசியம்
ADDED : பிப் 03, 2025 11:43 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் இயக்கப்படும் அனைத்து அரசு டவுன் பஸ்களிலும், பாதுகாப்பு தடுப்பான, 'அண்டர் ரன் புரொடெக்டர் ஷீட்'அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், சாலைகள் மேம்படுத்தப்பட்டு வந்தாலும், விபத்துகளின் எண்ணிக்கை குறையாமலும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. வாகன ஓட்டுநர்களின் அஜாக்கிரதையும், போக்குவரத்து விதிமீறல்களும் விபத்துகளுக்கு காரணமாகின்றன.
இரு சக்கர வாகன ஓட்டுநர்கள், பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களை கடந்த படியும், அதன் ஓரமாகவும் பயணிக்கும் போது, பக்கவாட்டில் விழுந்து, டயர்களில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
இதேபோல, பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கிச் செல்லும் பயணியர், கீழே விழுந்து டயர்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
மோசமான உயிரிழப்புகளை தடுப்பதற்கு, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் விபத்து அதிகம் நடப்பதால், அரசு டவுன் பஸ்களில், டயர்களுக்கு அடியில் சிக்கி ஏற்படும் விபத்துகளை தடுக்க, பாதுகாப்பு சட்டங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், அரசு போக்குவரத்துக்கழகம், பொள்ளாச்சி பணிமனைகளின் கீழ் இயக்கப்படும் டவுன் பஸ்களில், 'அண்டர் ரன் புரொடெக்டர் ஷீட்' அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது, சில பஸ்களில் மட்டுமே இத்தகைய தடுப்புச் சட்டம் பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து பஸ்களிலும் தடுப்புச் சட்டம் அமைக்க எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
அரசு பஸ்களின் பக்கவாட்டுப் பகுதிகளில், இந்த பாதுகாப்பு சட்டம் பொருத்தப்பட்டுள்ளது. இடதுபுறம் பஸ் படிக்கட்டுகளுக்கு இடையே உள்ள, 8 அடி இடை வெளியிலும், வலதுபுறம் கீழ் பகுதியில் 12 நீளத்திற்கும், ஒன்றரை அடி அகலத்தில், இரும்பு ஆங்கில்கள் அமைக்கப்பட்டுள்ளன; அவற்றின் மீது, இளஞ்சிவப்பு நிற பிளாஸ்டிக் ஷீட் தொங்கவிட்டுள்ளது.
கீழே விழுவோர், பஸ் டயர்களில் சிக்குவதை தடுக்க, இந்த சட்டம் பொருத்தப்படுகிறது. தவறி விழும்பட்சத்தில், அந்த இரும்பு தடுப்பில் பட்டு, அவர் வெளியே தள்ளி விடப்படுவார்.
பக்கவாட்டில் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் வந்து உரசினாலும், அவர்களும் உள்ளே விழாமல் பாதுகாக்கப்படுவர். அனைத்து பஸ்களில், தடுப்பு சட்டம் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.