/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ்சில் திருடர்கள் ; பயணியர் ஜாக்கிரதை
/
பஸ்சில் திருடர்கள் ; பயணியர் ஜாக்கிரதை
ADDED : ஜன 26, 2024 12:28 AM
பொள்ளாச்சி, ஜன. 26-
பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, திருடர்கள் கைவரிசை காட்டுவதால், விழிப்புணர்வு அறிவிப்புகளை பஸ் ஸ்டாண்டில் இடம்பெறச் செய்ய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவை, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பழநி, மதுரை என, தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள், பொள்ளாச்சி மார்க்கமாக செல்கின்றன. அவ்வகையில், தைப்பூசம் விழாவை முன்னிட்டு, அதிகப்படியான மக்கள், பழநி முருகர் கோவிலுக்கு சென்று திரும்புகின்றனர்.
இதனால், கடந்த சில தினங்களாக பஸ்களில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருவதாக புகார் எழுகிறது.
குறிப்பாக, அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களின் காலை நேர பதட்டத்தை பயன்படுத்திக் கொள்ளும் இக்கும்பல், மொபைல், பர்ஸ் மற்றும் நகை, பணத்தை லாவகமாக திருடி விடுகின்றனர்.
நீண்ட நேரம் கழித்தே, பொருட்கள் களவு போன விஷயம் தெரியவருவதால், திருட்டு கும்பலை பிடிக்க முடிவதில்லை. பஸ் ஸ்டாண்ட் புறக்காவல் நிலையம் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
பயணியர் கூறுகையில், 'கூட்ட நெரிசல் மற்றும் பஸ்சில் இடம் பிடிக்க முண்டியடிக்கும் பயணியரின் அவர நிலையை திருடர்கள் பயன்படுத்துகின்றனர். திருடியதும், ஊர்ந்து செல்லும் பஸ்சில் இருந்து இறங்கி, தப்பி விடுகின்றனர்.
இந்நிலையில், பயணியர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பஸ் ஸ்டாண்ட்டில் ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்புகள் செய்ய வேண்டும்,' என்றனர்.

