/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பஸ்கள்
/
பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பஸ்கள்
ADDED : டிச 11, 2024 10:17 PM
அன்னுார்; கோர்ட் பஸ் ஸ்டாப்பில் பஸ்களை நிறுத்தாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
அன்னுாரில், சத்தி சாலையில், பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது.
இங்கு விளைபொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளும், வாங்க வியாபாரிகளும் வருகின்றனர்.
இந்த வளாகத்தில் கடந்த ஓராண்டாக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அன்னுாரில் இருந்து புளியம்பட்டி மற்றும் சத்தி செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் கோர்ட் பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவதில்லை. இரண்டு டவுன் பஸ்கள் மட்டும் இந்த வழித்தடத்தில் உள்ளன. அவையும் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை தான் வருகின்றன. இதனால் வழக்கறிஞர்கள், கோர்ட் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதையடுத்து அன்னுார் அட்வகேட்ஸ் அசோசியேசன் சார்பில், அன்னுார் அரசு போக்குவரத்துக் கழக கிளை அலுவலகத்தில் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.
அரசு பஸ்களை கோர்ட் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், கோவை கலெக்டர் அலுவலகம், தமிழக முதல்வரின் தனி பிரிவு ஆகியவற்றுக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

