/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி 56வது வார்டுக்கான இடைத்தேர்தல்... இப்போது இல்லை! தேர்தல் பிரிவினர் 'அப்செட்'; தி.மு.க.,வினர் நிம்மதி
/
மாநகராட்சி 56வது வார்டுக்கான இடைத்தேர்தல்... இப்போது இல்லை! தேர்தல் பிரிவினர் 'அப்செட்'; தி.மு.க.,வினர் நிம்மதி
மாநகராட்சி 56வது வார்டுக்கான இடைத்தேர்தல்... இப்போது இல்லை! தேர்தல் பிரிவினர் 'அப்செட்'; தி.மு.க.,வினர் நிம்மதி
மாநகராட்சி 56வது வார்டுக்கான இடைத்தேர்தல்... இப்போது இல்லை! தேர்தல் பிரிவினர் 'அப்செட்'; தி.மு.க.,வினர் நிம்மதி
ADDED : மே 22, 2025 11:50 PM

கோவை:கோவை மாநகராட்சியில், 56வது வார்டுக்கான இடைத்தேர்தல் இப்போதைக்கு நடைபெற வாய்ப்பில்லை என்பதால், தி.மு.க.,வினர் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், தேர்தல் பிரிவினர் 'அப்செட்' ஆகியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான பூர்வாங்க பணிகளை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செய்து வந்தது. கோவை மாநகராட்சி, 56வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மூன்று பள்ளிகளில், 16 ஓட்டுச்சாவடிகள் தயார் செய்யப்பட்டன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தருவிக்கப்பட்டு, 'பெல்' இன்ஜினியர்கள் வரவழைக்கப்பட்டு, சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியல் பெறப்பட்டு, புதிய வாக்காளர்களுடன் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இடைத்தேர்தல் தேதி அறிவித்ததும், வேட்பு மனு பெறும் நடவடிக்கையை துவங்க திட்டமிடப்பட்டது. 'ஷிப்ட்' முறையில் பணியாற்றும் வகையில் மூன்று பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. அவர்களுக்கான வாகனங்கள் ஒதுக்கப்பட்டன. ஓட்டுச்சாவடிக்கு பணிபுரியவும், ஓட்டுப்பதிவு முடிந்து, ஓட்டு எண்ணிக்கை அன்று பணிபுரிவதற்கும் எத்தனை ஊழியர்கள் தேவை என கணக்கிடப்பட்டது.
வார்டு இடைத்தேர்தலாக இருந்தாலும்,ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, 56வது வார்டுக்கு மாநகராட்சியில் இருந்து ரூ.1.25 கோடி ஒதுக்கி, பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மழை நீர் வடிகால் கட்டுவது; தெருவிளக்குகள் அமைப்பது; ரோடு போடுவது உள்ளிட்ட வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன.
தி.மு.க., சார்பில், நான்கு ஆண்டு சாதனைகளை விளக்கி, மக்களிடம் பிரசாரம் செய்யப்படுகிறது; சமீபத்தில் அப்பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.
பூத் கமிட்டி அமைத்து, கட்சியினர் தயார் படுத்தப்பட்டுள்ளனர். மீண்டும் காங்கிரசுக்கு வார்டு ஒதுக்கப்படுமா அல்லது தி.மு.க.,வுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஊட்டி வந்திருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை திரும்பியதும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக, உள்ளாட்சி துறையினர் தெரிவித்திருந்தனர்.
இச்சூழலில், ஒன்பது மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை செய்து, இட ஒதுக்கீடு முடிவெடுக்காமல், இடைத்தேர்தல் நடத்தக் கூடாதென ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது; இதுதொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜராகி, விளக்கம் கொடுத்து, அனுமதி பெற வேண்டும்.
அதுவரை இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. கோவை மாநகராட்சி, 56வது வார்டில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, தயார் நிலையில் இருந்த சூழலில், நிறுத்தி வைக்கப்பட்டதால், தேர்தல் பிரிவினர் 'அப்செட்' ஆகியுள்ளனர்.
அதேநேரம், வார்டுக்குள் ஆளுங்கட்சி மீது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதால், தி.மு.க.,வினர் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.