/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
56வது வார்டில் இடைத்தேர்தல்; ரூ.1.26 கோடிக்கு வேலை துவக்கம்
/
56வது வார்டில் இடைத்தேர்தல்; ரூ.1.26 கோடிக்கு வேலை துவக்கம்
56வது வார்டில் இடைத்தேர்தல்; ரூ.1.26 கோடிக்கு வேலை துவக்கம்
56வது வார்டில் இடைத்தேர்தல்; ரூ.1.26 கோடிக்கு வேலை துவக்கம்
ADDED : ஏப் 15, 2025 11:33 PM

கோவை : கோவை, 56வது வார்டில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால், 1.26 கோடி ரூபாய்க்கு அவசர அவசரமாக, பல்வேறு பணிகளை துவக்கியிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம்.
கோவை மாநகராட்சி, 56வது வார்டு கவுன்சிலராக இருந்த கிருஷ்ணமூர்த்தி, கடந்தாண்டு நவ., மாதம் உயிரிழந்தார். அப்பதவிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, ஓட்டுச்சாவடி தயார் செய்வது உள்ளிட்ட பணிகளை தேர்தல் பிரிவினர் செய்து வருகின்றனர்.
கவுன்சிலர் இறந்து நான்கரை மாதமாகி விட்டது. அப்பகுதியை சேர்ந்தவர்கள், தங்களது கோரிக்கையை மாநகராட்சியிடம் தெரிவிக்க முடியாமல் இருந்தனர். அப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் இருந்ததால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படக்கூடும் என பயந்த அதிகாரிகள், அவ்வார்டுக்கு என்னென்ன வசதிகள் செய்ய வேண்டுமென, பட்டியல் தயாரித்திருக்கின்றனர்.
அதன்படி, மழை நீர் வடிகால் கட்டுவது, புதிதாக தார் சாலை போடுவது, பாதாள சாக்கடை பணிக்கு தோண்டிய இடங்களில் சாலை பராமரிப்பு, 24 மணி நேர குடிநீர் வினியோக இணைப்பு உள்ளிட்ட பணிகள் செய்வதற்காக, ஒரு கோடியே, 26 லட்சம் ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியிருக்கிறது.
இடைத்தேர்தலுக்கு அவகாசம் குறைவாக இருப்பதால், பணிகளை விரைந்து மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்பணிகளை, உதவி கமிஷனர் முத்துசாமி முன்னிலையில், கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி நேற்று துவக்கி வைத்தார். தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

