/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுத்தையை பிடிக்க மூன்றாவது இடத்தில் கூண்டு
/
சிறுத்தையை பிடிக்க மூன்றாவது இடத்தில் கூண்டு
ADDED : டிச 13, 2024 09:24 PM

மேட்டுப்பாளையம்;சிறுமுகை வனப்பகுதியில் சிறுத்தைகள் பவானி ஆற்றை கடந்து, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நாய்களை, வேட்டையாடி வருகின்றன. இது அல்லாமல் பசு கன்றுகளையும், ஆடுகளையும் வேட்டையாடி வருகின்றன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை பிடிப்பதற்கு, சிறுமுகை வனத்துறையினர் கூண்டை வைத்து கண்காணித்து வந்தனர்.
கூண்டில் சிறுத்தை சிக்காததால், கடந்த இரண்டு வாரங்களில், இரண்டு இடங்களில் கூண்டை இடமாற்றி வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் குத்தாரிபாளையத்தில் சக்தி என்பவர் வீட்டில் வைத்துள்ள, கண்காணிப்பு கேமராவில், சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்தது தெரியவந்தது.
இதைப் பார்த்த சிறுமுகை வனத்துறையினர் வனச்சரக அலுவலர் மனோஜ் தலைமையில், வன ஊழியர்கள் கூண்டை மூன்றாவது முறையாக குத்தாரிபாளையம்-வெள்ளிப்பாளையம் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள புதரில், வைத்துள்ளனர். இதில் கூண்டில் சிறுத்தைக்கு பிடித்தமான இறைச்சியை வைத்துள்ளனர்.

