/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானியத்தில் விதைகளை பெற விவசாயிகளுக்கு அழைப்பு
/
மானியத்தில் விதைகளை பெற விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : பிப் 19, 2025 10:33 PM
தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், மானியத்தில் சோளம், கம்பு, உளுந்து, பச்சைப்பயிறு, நிலக்கடலை மற்றும் எள் விதைகளைப்பெற, வேளாண்மைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தொண்டா முத்தூர் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநில வேளாண் வளர்ச்சி திட்டம், தமிழ்நாடு சிறு தானிய இயக்கம் மற்றும் சிறுதானிய உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ், சோளம் விதைகள், 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. தானியம் மற்றும் கால்நடை தீவனத்திற்கு ஏற்ற கோ 32 சோளம், கோவில்பட்டி 12 சோளம் ஆகிய உயர் விளைச்சல் ரகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கோ 32 சோளம் ரகம், மானாவாரி மற்றும் இறவை சாகுபடிக்கு ஏற்றது.
விதை கிராம திட்டத்தின் கீழ், கோ 10 கம்பு உயர் விளைச்சல் ரகம் வழங்கப்படுகிறது. இந்த ரக கம்பு, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில், விதைப்பு செய்திட ஏற்றது.
பயறு வகை பயிர்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ், வம்பன் 10, வம்பன் 11 ஆகிய உயர் விளைச்சல் உளுந்து ரகங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த ரகங்கள், அனைத்து காலத்திலும் விதைப்பு செய்து சாகுபடி மேற்கொள்ள ஏற்ற, 70 நாள் கால ரகமாகும். அதேபோல, விதை கிராமத் திட்டத்தின் கீழ், உயர் விளைச்சல் வம்பன் 5 ரக பச்சைப்பயிறும் மானியத்தில் விநியோகிக்கப்படுகிறது.
தேசிய உணவு எண்ணெய் இயக்கம் மற்றும் விதை கிராம திட்டத்தின் கீழ், உயர் விளைச்சல் நிலக்கடலை மற்றும் எள் விதைகளும் மானியத்தில் வழங்கப்படுகிறது.
நிலக்கடலையில், கதிரி லெபாக்சி 1812 மற்றும் எள் பயிரில் விருதாசலம் 4, திண்டிவனம் 3 ஆகிய ரகங்கள் இருப்பு உள்ளது.
விருப்பமுள்ள விவசாயிகள், தொண்டாமுத்தூர் வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

