ADDED : செப் 09, 2026 06:52 PM
கோவை: சிறப்பு ஓய்வூதியம் பெறும் சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளர் மற்றும் கிராம ஊராட்சி செயலாளர் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1,200 வரை குடும்ப ஓய்வூதியம் வழங்க கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. மேலும் ஓய்வூதியம் பெற்று வரும் பணியாளர் உயிரிழந்தால், இறுதிச்சடங்கு செலவுக்காக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், அரசு அறிவித்தபடி ஈமச்சடங்கு முன்பணம் வழங்கப்படுவதில்லை என, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
சங்க செயலாளர் வெங்கடசுப்பிரமணியன் கூறுகையில், ‘‘ஊழியர்களுக்கான ஈமச்சடங்கு முன்பணம் குறித்த அரசு உத்தரவு, மருத்துவ காப்பீடு உத்தரவு வரவில்லை எனக்கூறி, அதிகாரிகள் ஈமச்சடங்கு முன்பணம் வழங்க மறுக்கின்றனர். அனைத்து ஒன்றியங்களிலும் இதே நிலைதான். அரசு அறிவித்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும்,’’ என்றார்.
