ADDED : செப் 09, 2026 06:52 PM
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க போலீசார்
பெ.நா.பாளையம்: சுற்றுச்சூழலை பாதுகாக்க, விநாயகர் சதுர்த்தியின் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து, பெரிநாயக்கன்பாளையம் போலீசார் ஹிந்து அமைப்புகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர். வரும் 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஹிந்து அமைப்புகள் ஊர்வலங்களைத் திட்டமிட்டுள்ளன. விநாயகர் சிலை தயாரிப்பு மற்றும் விசர்ஜனத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களை வலியுறுத்தியுள்ள மாவட்ட நிர்வாகம், அந்தந்தப் பகுதி போலீசார் வாயிலாக ஹிந்து அமைப்புகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கூறியதாவது:
கோவை மாவட்டத்தை பொறுத்த அளவு ஆறு மற்றும் குளம் ஆகியவை முக்கிய நீர் ஆதாரங்கள். இவற்றை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. விநாயகர் சிலைகளை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு, நீர் நிலைகளில் கரைக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்ட் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் கலவையற்ற மூலப் பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில், பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும்.
சிலைகள் தயாரிக்க உலர் மலர்கள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக்க, மரங்களின் இயற்கை பிசின்களைப் பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்க, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், வண்ண பூச்சுக்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.
எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ண பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.
சிலைகளை அழகுபடுத்த இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பூக்கள், இலைகள், துணிகள், பூஜை பொருட்களை பயன்படுத்தலாம்.
இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.
