ADDED : மார் 10, 2026 04:42 AM
மேட்டுப்பாளையம்: ''ஜெர்மன் மொழி இலவசமாக படிக்க, படித்த இளைஞர்கள் வகுப்பில் உடனடியாக சேரவேண்டும்,'' என, மொழி பயிற்றுனர் ஹரிஹரன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகத்தால், 'வெற்றி நிச்சயம்' திட்டத்தில், படித்த இளைஞர், இளம் பெண்களுக்கு, போட்டித் தேர்வுக்கான பயிற்சி நடந்து வருகிறது. வெளிநாடுகளில் வேலை பெற, வெளிநாட்டு மொழிகளை பயிற்றுநர்களை கொண்டு, சொல்லிக் கொடுக்கும் பயிற்சி வகுப்பும் நடத்தப்படுகிறது.
மேட்டுப்பாளையம் நகராட்சி நுாலகம் மற்றும் அறிவு சார் மையத்தில், ஜெர்மன் மொழி பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது. ஜெர்மன் மொழி பயிற்றுநர் ஹரிஹரன் பேசுகையில், ''வகுப்பில், 20 மாணவ, மாணவியர் மட்டுமே உள்ளனர்.
அதிகமான மாணவர்கள் இருந்தால் சொல்லிக் கொடுக்க வசதியாக இருக்கும். எனவே படித்த, 35 வயதுக்கு கீழ் உள்ள மாணவ, மாணவியர் உடனடியாக வகுப்பில் சேர வேண்டும். இதில் சேர்ந்து படிக்க கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை,'' என்றார்.
