/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தங்கும் விடுதிகளில் கேமரா அவசியம்; ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை
/
தங்கும் விடுதிகளில் கேமரா அவசியம்; ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை
தங்கும் விடுதிகளில் கேமரா அவசியம்; ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை
தங்கும் விடுதிகளில் கேமரா அவசியம்; ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை
ADDED : செப் 17, 2025 08:48 PM

வால்பாறை; தங்கும் விடுதிகளில் கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்த வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் போலீசார் அறிவுறுத்தினர்.
கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான வால்பாறைக்கு, சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் தங்கி செல்ல வசதியாக வால்பாறையில், ரிசார்ட்கள், காட்டேஜ்கள் அதிக அளவில் கட்டப்பட்டுள்ளன.
வால்பாறை நகர், ரொட்டிக்கடை, சோலையாறுடேம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் முறையாக அனுமதி பெறாமல் செயல்படுகின்றன. ஒரு சில விடுதிகள் மட்டுமே முறையான ஆவணங்களோடு செயல்படுகின்றன.
இந்நிலையில், கோவை எஸ்.பி. வால்பாறையில் அனுமதி பெறாமல் செயல்படும் தங்கும் விடுதிகள், உரிய ஆவணங்களை உடனடியாக போலீஸ் ஸ்டேஷனில் சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார்.
எஸ்.பி., உத்தரவை அமல்படுத்தும் வகையில், வால்பாறை போலீஸ் ஸ்டேஷனில் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், வால்பாறை தங்கும்விடுதி உரிமையாளர்கள் சங்க செயலாளர் ஷாஜூ, தலைவர் பாபுஜி, பொருளாளர் பிரதீப்குமார் மற்றும் தங்கும்விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
போலீசார் பேசியதாவது:
சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறையில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும். 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆண்கள், பெண்கள் விடுதியில் தங்கினால், போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் யாரையும் விடுதியில் தங்க அனுமதிக்கக்கூடாது. சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாரேனும் தங்கினால், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தங்கும் விடுதிகள் நடத்தி வருபவர்கள், தங்குபவர்களின் விபரம் குறித்து நாள் தோறும்போலீஸ் ஸ்டேஷனில் பதிவேடுகளை சமர்ப்பிக்க வேண்டும். சுற்றுலா பயணியரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, பேசினர்.