/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லோக்சபா தேர்தலுக்கு பிரசாரம் நிறைவடைய... இன்னும் ஐந்தே நாட்கள்!அனல் வெயிலில் சுழன்றடிக்கும் வேட்பாளர்கள்
/
லோக்சபா தேர்தலுக்கு பிரசாரம் நிறைவடைய... இன்னும் ஐந்தே நாட்கள்!அனல் வெயிலில் சுழன்றடிக்கும் வேட்பாளர்கள்
லோக்சபா தேர்தலுக்கு பிரசாரம் நிறைவடைய... இன்னும் ஐந்தே நாட்கள்!அனல் வெயிலில் சுழன்றடிக்கும் வேட்பாளர்கள்
லோக்சபா தேர்தலுக்கு பிரசாரம் நிறைவடைய... இன்னும் ஐந்தே நாட்கள்!அனல் வெயிலில் சுழன்றடிக்கும் வேட்பாளர்கள்
ADDED : ஏப் 12, 2024 10:29 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், தேர்தல் பிரசாரம் நிறைவு பெற இன்னும், ஐந்து நாட்களே உள்ளதால் வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, அனல் பறக்கும் வெளியிலையும் பொருட்படுத்தாமல், தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதி, உடுமலை, மடத்துக்குளம், பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்துார் ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. அதில், அ.தி.மு.க., கார்த்திகேயன், தி.மு.க., ஈஸ்வரசாமி, பா.ஜ., வசந்தராஜன், நாம் தமிழர் கட்சி சுரேஷ்குமார் உட்பட, கட்சி வேட்பாளர்கள் 6 பேர்; சுயேட்சைகள் ஒன்பது பேர் என, மொத்தம், 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பல்வேறு சிறப்புகளை பெற்ற பொள்ளாச்சி தொகுதியை கைப்பற்ற கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது.
அ.தி.மு.க., வேட்பாளர், தொகுதியை கைப்பற்ற, ஆறு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தினமும் ஆலோசனை நடத்தி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தினமும் வார்டு, வார்டாக சென்று மக்களை சந்தித்து ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அ.தி.மு.க., ஆட்சியில் செய்த சாதனைகள், தி.மு.க., ஆட்சியில் வரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கூறி ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
தி.மு.க.,வினர், பொள்ளாச்சி தொகுதியில் கடந்த முறை போன்று இம்முறையும் வெற்றி பெற வேண்டும் என, வேட்பாளருடன் பிரசாரம் செய்கின்றனர். மகளிர் உரிமை தொகை திட்டம், இலவச பஸ் பயணம் என அரசின் நலத்திட்டங்கள் மற்றும் தேர்தல் அறிக்கையை துண்டு பிரசுரங்களாக வழங்கி ஓட்டு சேகரிக்கின்றனர்.
பா.ஜ.,வினர், பொள்ளாச்சி பகுதியில், வேட்பாளரை ஆதரித்து, தினமும் பிரசாரம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு பகுதிக்கும் தினமும் சென்று மக்களிடம் பா.ஜ., செய்த சாதனைகளை கூறி ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
'உங்க எம்.பி., நிக்க வச்சு கேளுங்க; என்ன வேண்டும் சொல்லுங்க,' என்ற தலைப்பில், தென்னை விவசாயிகள், தென்னை நார் உற்பத்தியாளர்கள், கரும்பு விவசாயிகள், பொதுமக்களுடன் கலந்துரையாடி, வளர்ச்சி திட்டங்களை பேசி ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
மேலும், நாம் தமிழர் கட்சியினரும், மாற்றத்தை விதைக்க வேண்டுமென்றால், எங்களுக்கு ஓட்டு போடுங்கள்; ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என பிரசாரம் செய்து வருகின்றனர்.
அந்தந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்வதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் ஓட்டுப்பதிவு, வரும், 19ம் தேதி நடப்பதால், 17ம் தேதி மாலை பிரசாரம் நிறைவு பெறகிறது. இன்னும், ஐந்து நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்ய முடியும் என்பதால், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினமும், 20 கிராமங்களில், 40 இடங்களில் திட்டமிட்டு பிரசாரம் செய்கின்றனர். இதுதவிர, கட்சி வி.ஐ.பி.,க்கள், நட்சத்திர பேச்சாளர்கள் வருகையின் போது, அவர்களுடன் சேர்த்து ஓட்டு சேகரிக்கின்றனர்.
ஆரம்பத்தில் மந்தமாக இருந்தாலும், தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், வேட்பாளர்கள், கட்சியினர் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்களை ஆதரித்து, அந்தந்த கட்சியினர் நேரிடையாக மக்களை சந்தித்தும், சமூகவலைதளங்கள் வாயிலாகவும், ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர்.

