/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
87 வயதில் என்னை அலைக்கழிக்கலாமா?
/
87 வயதில் என்னை அலைக்கழிக்கலாமா?
ADDED : டிச 27, 2025 05:14 AM

கோவை: பென்ஷன் ஆர்டரில் மனைவி பெயர் தவறாக பதிவு செய்ததை சரியாக பதிவு செய்து கொடுக்க வலியுறுத்தி முன்னாள் ராணுவத்தினருக்கான குறைதீர்ப்பு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தார் 87 வயது முன்னாள் ராணுவ வீரர்.
கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் ராணுவத்தினருக்கான குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது அதில் வந்த மனுக்களில் சில:
* மதுக்கரை சுவிசேஷமுத்து: மதுக்கரையிலுள்ள மலையை ஒட்டிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் நிறைந்துள்ளன. இங்குள்ள வளைவான பாதைகளில் இரவு நேரத்தில் செல்வதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர் அங்கு தெருவிளக்குகள் வெளிச்சம் கிடைக்கும் வகையில் குறிப்பிட்ட இடைவெளியில் அமைத்துக்கொடுக்க வேண்டும்.
* வெள்ளக்கிணறு கருப்புச்சாமி : நான் குடியிருக்கும் வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு மேற்கொள்ளப்பட வேண்டிய இடத்துக்கும், 160 அடி துாரம் இருப்பதால் குடிநீர் இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை அதனால் அன்றாடம் குடிநீருக்கு சிரமப்படுகிறேன், விரைவாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.
* பொள்ளாச்சி புளியம்பட்டி தண்டபாணி, 87: பென்ஷன் புத்தகத்திலுள்ள பி.பி.ஆர்டரில் மனைவி விஜயலட்சுமியின் பெயர் லட்சுமி என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது எனது தவறல்ல. அதனடிப்படையில் அரசின் ' ஸ்பர்ஸ் ' சாப்ட்வேரிலும் மாற்றம் செய்ய வேண்டும்.
பலமுறை மனு கொடுத்துவிட்டேன். நடக்கவில்லை. எனக்கு பின் மனைவிக்கு என் பென்ஷன் சேர வேண்டும். அதற்கு வழி செய்யுங்கள். 87 வயதில் என்னை நடையாய் நடக்க வைப்பது என்ன நியாயம்?
* முன்னாள் ராணுவவீரர்கள் கடைசியாக பணிபுரிந்த போது பெற்ற கடைசி அடிப்படை ஊதியத்தை தமிழக அரசுப்பணியாளராக சேரும் போது ஆரம்ப அடிப்படை ஊதியமாக நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என்று தேசிய முன்னாள் ராணுவ ஒருங்கிணைப்பு கமிட்டி நிர்வாகிகள் வலியுறுத்தி மனுக்கொடுத்தனர்.
இது போன்று ஏராளமான முன்னாள் ராணுவத்தினர் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து மனுக்களை சமர்பித்தனர்.
கலெக்டர் பவன்குமார் மற்றும் நேர்முக உதவியாளர் நிறைமதி மனுக்களை பெற்று துறைரீதியாக நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தனர்.

