ADDED : மே 10, 2025 02:03 AM

நாங்கள் புதிதாக கட்டி வரும் வீட்டின் சமையலறையில், 'எக்சாஸ்ட் பேன்' அல்லது எலக்ட்ரிக்கல் சிம்னி; இதில் எது சிறந்தது என்று ஆலோசனை கூறவும்?
-ஆனந்தகுமார், வடுகபாளையம்.
பொதுவாக சமையலறையில் அமைக்கும் எலக்ட்ரிக்கல் சிம்னி அல்லது எலக்ட்ரிக்கல் பேன் அறையின் அளவு மற்றும் தேவையை பொறுத்து மாறுபடுகிறது. சமையலறையின் சிறியதாகவும், அதிக எண்ணெய் உபயோகப்படுத்தப்படாமல் இருந்தால், எலக்ட்ரிக்கல் பேனே போதுமானது. சமையலறையின் அளவு பெரியதாகவும் எண்ணெய் பயன்பாடு அதிகமாக இருந்தாலும், எலக்ட்ரிக்கல் சிம்னி அமைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
நாங்கள் இருக்கும் வீட்டின் மேல் மாடியை சற்று கூடுதலாக கட்ட உள்ளோம். எங்கள் வீட்டில் உள்ள போர்வெல் தண்ணீரின் தன்மை, சற்று உப்பு அதிகமாக உள்ளது. நாங்கள் விரிவுபடுத்தும் கட்டடத்துக்கு போர்வெல் தண்ணீரை பயன்படுத்தலாமா?
-ஆதிசங்கர், கணபதி.
போர்வெல் தண்ணீரின் தரம் இடத்திற்கு இடம் வேறுபடும். எனவே, அத்தண்ணீரை பயன்படுத்தும் முன் அதன் தரம் குறித்து பரிசோதனை செய்வது அவசியம். போர்வெல் தண்ணீரில் அசுத்தங்கள் மற்றும் கடினத்தன்மை இருந்தால், அவற்றை சுத்திகரிப்பு செய்த பிறகு பயன்படுத்த வேண்டும்.
நாங்கள் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டின் ஆழ்துளை கிணறு அருகே கழிவுநீர் தொட்டி வருகிறது; அதை எவ்வாறு அமைப்பது.
-வசந்தி, சுண்டக்காமுத்துார்.
ஆழ்துளை கிணறு அருகே செப்டிக் டேங்க் கட்டும்போது முறையாக செங்கல் அல்லது கான்கிரீட் சுவர்களால் கட்ட வேண்டும். கழிவுநீர் தொட்டியில் கழிவும், கழிவுநீரும் பிரிந்து வெளியேறும் வகையில், அமைப்பை உண்டாக்க வேண்டும். தற்போது அதிகப்படியான பயோ செப்டிக் டேங்குகள் சந்தையில் கிடைக்கின்றன. பயோ செப்டிக் டேங்க் பயன்படுத்தும் போது கழிவுநீர் சரியான முறையில் சுத்திகரிக்கப்பட்டு, மறு சுழற்சிக்கு பயன்படுத்தப்படும்.
நாங்கள் கட்டி வரும் வீட்டில் தரையில், அமைக்கும் கான்கிரீட்டை எவ்வாறு அமைக்க வேண்டும். எங்களது கான்ட்ராக்டர் தரையில், 1.5 இன்ச் கற்களை பரப்பி அதன் மீது, கலவையை துாவி மட்டம் செய்யலாம் என்று கூறுகிறார். சரியா என்று ஆலோசனை கூறவும்.
-சரவணன்,கோவை.
பொதுவாக எந்த ஒரு கான்கிரீட் கலவையும், கான்கிரீட் கலவை இயந்திரத்தில் சரியான விதத்தில் 1.5 கிரஷர் கற்கள், எம் சாண்ட் மற்றும் சிமென்ட் பொருட்களை உபயோகப்படுத்தி கலந்து மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். கான்கிரீட் கலவை இயந்திரத்தில் கலக்கும் போது மட்டுமே அதன் வலிமையும், அதன் பயன்பாடும் சரியான விதத்தில் இருக்கும்.
சுவர்கள் கட்டுவதற்கு சந்தையில் கிடைக்கக்கூடிய மாற்றுப் பொருட்கள் பற்றி ஆலோசனை கூறவும்.
-வசந்தன், சிறுமுகை.
சுவர்களுக்கு பயன்படுத்தும் பொருட்கள், கட்டுமான தன்மையை பொறுத்து வேறுபடுகின்றன. நமது பகுதிகளில் துாண்கள் மற்றும் பீம்கள் அமைத்து 'பிரேம்டு ஸ்ட்ரக்சர்' கட்டுவது மிகச்சிறந்தது. இன்று சந்தையில் சிவப்பு மண் செங்கல், பிளை ஆஷ் செங்கல், ஏ.ஏ.சி., பிளாக்ஸ், சிமென்ட் சாலிட் பிளாக்ஸ் போன்ற கட்டட கட்டுமான பொருட்கள் உள்ளன. நமது பயன்பாடு மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்ப, கட்டுமான பொருட்களை தேர்ந்தெடுத்து கட்டுவது நல்லது.
விஜயகுமார்
தலைவர்,
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம்(காட்சியா)