/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : அக் 14, 2025 10:16 PM

ஆனைமலை; 'கால்வாய்களின் கரையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனைமலை அருகே தென்சங்கம்பாளையத்தில், ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் அசோக்குமார், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் முருகேசன், திட்டக்குழு தலைவர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கிளை கால்வாய்களை துார்வாரி சுத்தம் செய்ய முதல்வர் அறிவித்த நிதியை, காலதாமதமின்றி பெற்று விரைவாக பணி முடித்து பாசன நீரை குறித்த காலத்தில் திறக்க வேண்டும்.
சமீப காலமாக, கால்வாய்களின் கரையில் ஆக்கிரமிப்பு, அத்துமீறல்கள், அரசியல்கட்சி பிரமுகர்கள் தலையீடு அதிகமாக உள்ளது. இது பற்றி பாசன சபை தலைவர்களிடம் தெரிவித்தாலும், அவர்களால் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை.
அதனால், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு துறை வாயிலாக ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி, பாசன நீர் வழித்தடத்தை பாதுகாக்க வேண்டும்.
தேங்காய்க்கு தற்போது நல்ல விலை கிடைக்கிறது. இதை பயன்படுத்தி தேங்காய் திருட்டு அதிகமாக நடைபெறுகிறது. திருட்டில் ஈடுபடுவோர் மீதும், திருட்டு தேங்காய் வாங்கும் கடைகள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை தடுக்காவிட்டால், திருடனை விவசாயிகள் பிடித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். இது தொடர்பாக சப் - கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்கப்படும்.
பி.ஏ.பி. திட்ட தொகுப்பணைகளின் நீர் இருப்பு நிறைவாக இருப்பதால், பாசனத்துக்கு முழுமையான நீரை ஒதுக்கி கடைமடை வரை தடையின்றி நீர் வழங்க வேண்டும்.
பாசன கால்வாய்களில் உள்ள சேதமடைந்த மதகுகள், தடுப்புகளை நீர் வழங்கும் முன் சிறப்பு நிதி பெற்று சரிசெய்தபிறகே நீர் திறக்க வேண்டும். இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.