/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து; வரவேற்று ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்து
/
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து; வரவேற்று ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்து
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து; வரவேற்று ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்து
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து; வரவேற்று ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்து
ADDED : மே 05, 2025 11:06 PM

கோவை, ; சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி இல்லை என்ற அறிவிப்பு, அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.
ஏற்கனவே 2024 -- 2025 கல்வியாண்டுக்கான, ஏப்ரல் மாதத்திற்குள் 9ம் வகுப்பிற்கு உட்பட்ட அனைத்து வகுப்புகளுக்குமான, தேர்வுவிடைத்தாள்கள் திருத்தப்பட்டு, பழைய நடைமுறையின் அடிப்படையில், மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
ஆகவே, புதிய நடைமுறை அடுத்த கல்வியாண்டிலிருந்து, முழுமையாக அமலுக்கு வருகிறது. புதிய நடைமுறைக்கு பெற்றோர்களும், பள்ளிகளில் ஒப்புதல் அளித்து வருகின்றனர்.
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் நடைமுறைக்கு வரும் இந்த திட்டம் குறித்து, கல்வியாளர்களும், ஆசிரியர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இடைநிற்றல் அதிகரிக்கும்
பெயர் வெளியிட விரும்பாத, கோவை அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் கூறியதாவது:
சி.பி.எஸ்.இ., கொண்டு வந்துள்ள இந்த நடைமுறையால், கட்டாயம் படிக்கவேண்டும் என்ற எண்ணம், நிச்சயமாக மாணவர்களுக்கு உருவாகும். இதுபோன்ற ஒரு முறை, முந்தைய காலங்களில் மாநில பாடத்திட்டத்திலும் இருந்தது.
இப்போதைய காலகட்டத்தில், இதை மீண்டும் அரசு பள்ளிகளில் நடைமுறைப்படுத்தினால், மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும்.
மாநில பாடத்திட்டத்தில், மாணவர்களுக்கு கருத்தறிவு அடிப்படையிலான கற்றல் வாய்ப்பு குறைவாக உள்ளது. மாநில அரசு, ஆசிரியர்கள் மீது அதிக பணிச்சுமையையும், அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
'எமிஸ்' உள்ளிட்ட மாணவர்களுக்கான தரவுகளை பதிவேற்றம் செய்வது, ஆவணங்களை சரிபார்ப்பது போன்ற பல்வேறு வேலைகள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன. இதனால், அவர்கள் நேரடியாக மாணவர்களுடன் கலந்துரையாடி, பாடம் கற்பித்தலில் கூடுதல் நேரம் செலவிட முடியாமல் உள்ளனர்.
எழுத்தறிவில் முன்னிலை பெற்ற மாநிலம் என பெருமை பேசும் அரசாங்கம், திறமையான மாணவர்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், சி.பி.எஸ்.இ., கொண்டு வந்துள்ள இந்த நடைமுறையில், மாணவர்கள் கட்டாயத்துடன் கல்வியில் கவனம் செலுத்தும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
இந்த நடைமுறையால், திறமையான மாணவர்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும். சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பெரும்பாலும் மாணவர்களுக்கு, திறன் சார்ந்த அடிப்படை கல்வி வழங்கப்படுவதால், போட்டித் தேர்வுகளில் அதிகமானோர் தேர்ச்சி பெறுகின்றனர். மாணவர்களின் தகுதிகளை மதீப்பீடு செய்து, அடுத்த நிலைக்கு அனுமதிக்கவே, இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனினும், மாநில பாடத்திட்டத்தில், இந்த நடைமுறையை அமல்படுத்துவதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். இருப்பினும், கட்டுப்பாட்டுடன் கூடிய, கட்டாயக் கல்வி வழங்கப்பட்டால், அரசு பள்ளிகளிலும் திறமையான மாணவர்களை உருவாக்க முடியும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.