/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல்: புற்றுநோய் 'பைலட்' திட்டம்
/
நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல்: புற்றுநோய் 'பைலட்' திட்டம்
நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல்: புற்றுநோய் 'பைலட்' திட்டம்
நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல்: புற்றுநோய் 'பைலட்' திட்டம்
ADDED : நவ 17, 2025 02:01 AM
கோவை: புற்றுநோய் ஸ்கிரீனிங் திட்டத்தில், பரிசோதனைக்கு ஒரு சில அரசு மருத்துவமனைகளில் போதிய உபகரணங்களும், பயிற்சி பெற்ற டாக்டர்களும் இல்லாததால், நோயாளிகளை குணப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தொற்றா நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், கோவையில் முன்மாதிரியாக, பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய் முன்கூட்டியே கண்டறியும் 'பைலட் திட்டம்' செயல்பாட்டில் உள்ளது. பிற மாவட்டங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த, சுகாதாரத்துறை ஆலோசித்து வருகிறது.
பரிசோதனைக்கு வருவதில்லை இத்திட்டத்தின் கீழ், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் ஸ்கிரீனிங் செய்யப்பட்டு, அறிகுறி உள்ளவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படுவர். அங்கு பரிசோதனையில் புற்றுநோய் இருப்பது உறுதியானால் சிகிச்சை துவக்கப்படும். ஆரம்ப நிலை அறிகுறிகள் கண்டறிய, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆனால், அறிகுறிகள் உள்ள நபர்களுக்கு பரிசோதனை செய்ய போதிய உபகரணங்கள், பயிற்சி பெற்ற டாக்டர்கள், பிற அரசு மருத்துவமனைகளில் இல்லை. இதனால், அந்நபர்கள் பரிசோதனைக்கு பெரும்பாலும் வருவதில்லை.
அரசு டாக்டர்கள் சங்க மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் மருத்துவமனைகளில்,புற்றுநோய் சிகிச்சையளிக்க பயிற்சி பெற்ற டாக்டர்கள், சரியான பரிசோதனை உபகரணங்கள் இருக்கவேண்டியது அவசியம்.
உதாரணமாக, கொலோனோஸ்கோபி உபகரணம் சில மருத்துவமனைகளில் இல்லை. அதை பயன்படுத்த அறிந்த டாக்டர்கள் இல்லாததால், நோயாளிகளை கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கின்றனர்.
மேட்டுப்பாளையம், அன்னுார், பொள்ளாச்சி போன்ற தொலைதுாரங்களில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு வர தயங்கி, அறிகுறியுடன் பரிந்துரைக்கப்படுபவர்களில், 70 சதவீதம் பேர் அடுத்தகட்ட பரிசோதனைக்கு வருவதே இல்லை.
பிற மாவட்டங்களில் கவனம் இதுபோன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தும் போது, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான உபகரணங்கள், பயிற்சி பெற்ற டாக்டர்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பிற மாவட்டங்களுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்தும் போது, அரசு இச்சிக்கல்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

