ADDED : ஜூலை 26, 2025 11:43 PM

வீ ட்டு வேலை, ஆபீஸ் வேலை, வீட்டு முதியோர், குழந்தைகள் பராமரிப்பு...இப்படி ஓடிக்கொண்டே இருந்த காயத்ரி, ஒரு கட்டத்தில் மெஷினாகவே மாறிப்போனாள்.
தலைவலியும், உடம்பு வலியும் பாடாய்படுத்தியது. உடன் பணிபுரிபவர்கள், 'இது ஸ்ட்ரெஸ்' என்றும், ஆயுர்வேதத்தில் இதற்கு நல்ல சிகிச்சை இருக்கிறது என்றும் சொன்னார்கள்.
கோவை ராமநாதபுரம் தன்வந்திரி ஆர்ய வைத்திய பார்மசி மருத்துவமனையை அணுகியபோது, 'கர்க்கடக சிகிச்சை' எடுத்துக் கொள்ளுங்கள். புது மனுஷி ஆகி விடுவீர்கள் என்றார்கள்.
அதென்ன கர்க்கடக சிகிச்சை? பதிலளிக்கிறார், ஆர்ய வைத்திய சிகிச்சாலயம் மற்றும் ஆராய்ச்சி நிறுவன மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் தாரா ஜெயஸ்ரீ.
பாரம்பரியமாகவே 'தலைக்கு எண்ணெய் வை... எண்ணெய் தேய்த்து குளி...' என்று, நம் பாட்டிகள் சொல்லி கேட்டு இருப்போம். இப்போது அதை யாரும் செய்வதில்லை. இவை அனைத்தும் ஆயுர்வேத பாரம்பரிய முறைகள் தான்.
பெற்றோர் கட்டாயம் பிள்ளைகளுக்கு, தலைக்கு அடிக்கடி எண்ணெய் வைத்து குளிப்பதையும், உடலில் எண்ணெய் தேய்த்து குளிப்பதையும், வீடுகளில் பழக்கப்படுத்த வேண்டும்.
மலையாள மாதங்களில் கடைசி மாதம் கார்க்கடகம்; தமிழில் பொதுவாக ஆடிமாதம் வரும். பருவமழை காலங்களில் பொதுவாக நம்மிடம், ஈரப்பதம் அதிகரித்து, வாதம், பித்தம், கபம் மூன்றும் சமநிலையில் இருக்காது.
அதை சமநிலைபடுத்துவதற்கு, மசாஜ் சிறந்த தீர்வு. உடல் கழிவுகளை வெளியேற்றி, ரத்த ஓட்டம், தசை செயல்பாடு என, முடி முதல் பாதம் வரை பாதிப்புகளின் தன்மை பொறுத்து, மசாஜ் செய்து குணமாக்கும் சிகிச்சை முறை இது.
இதனை 'கார்க்கடக மாத சிகிச்சா' என கூறுவார்கள். இம்மாதங்களில், ஆயுர்வேத மசாஜ் செய்து கொள்வது சிறந்தது.
உடலுக்கு புத்துணர்வை அளிக்க கூடியது. பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இந்த மசாஜ் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
உடல் கோளாறுகளை பொறுத்து, மசாஜ் சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படும். கட்டண முறையில் இங்கேயே தங்கியும், வெளியில் இருந்து வந்து சென்றும், சிகிச்சை எடுக்கும் வசதிகள் உள்ளன.