ADDED : ஏப் 16, 2026 06:42 PM

சூலூர்: சூலூர் தொகுதியில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், வேட்பாளர் பட்டியல் பொருத்தும் பணியில், 250க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட்டனர்.
சூலூர் தொகுதியில், 385 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள இரு ஸ்டிராங் ரூம்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ள, பேலட் யூனிட்டில் வேட்பாளர் பெயர்கள், சின்னங்களுடன் கூடிய பட்டியல் பொருத்தும் பணி நேற்று நடந்தது.
தேர்தல் பொது பார்வையாளர் கிருஷ்ணா ஆதித்யா முன்னிலையில், ஸ்டிராங் ரூம் சீல் அகற்றப்பட்டது. இயந்திரங்கள் எடுக்கப்பட்டு, அலுவலர்களிடம் கொடுக்கப்பட்டது.
பேலட் யூனிட்டில் வேட்பாளர் பட்டியல் பொருத்தும் பணி துவங்கியது. இதில், 250 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட்டனர்.
வி.வி.பாட் மற்றும் கண்ட்ரோல் யூனிட் சரிபார்க்கப்பட்டன. 385 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும், 77 ரிசர்வ் இயந்திரங்களை தயார்படுத்தும் பணி நடந்தது. 500 வி.வி.பாட் இயந்திரங்களும், 462 கண்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள், 462 பேலட் யூனிட் இயந்திரங்கள் தயாராக உள்ளன.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 385 இயந்திரங்கள், 77 இருப்பு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய பட்டியல் சின்னங்களுடன் பொருத்தப் பட்டுள்ளன. பணிகள் முடிந்து பின் ஸ்டிராங் ரூமில் வைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அறைக்கு சீல் வைக்கப்படும்,' என்றனர்.
