ADDED : பிப் 26, 2026 07:07 AM

அன்னுார்: 'விவசாயத்தை அழிக்கும் திட்டத்தை எதிர்த்துப் போராடுவேன்' என, 'நாம் தமிழர்' கட்சியின் அவிநாசி தொகுதி வேட்பாளர் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் அவிநாசி (தனி) தொகுதி வேட்பாளராக அவிநாசியை சேர்ந்த மேனகா அறிவிக்கப்பட்டுள்ளார். பி.ஏ., பி.எட்., பட்டதாரியான இவர், அவிநாசியில், தனியார் மருத்துவமனையில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். கட்சியின் மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார். ஏழு ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளார். இவரது கணவர் விஜயகுமார், அவிநாசி நகரச் செயலாளர்.
மேனகா கூறியதாவது:
அன்னுார் பகுதியில் விவசாயத்தை அழித்து 'சிப்காட்' கொண்டு வர தி.மு.க., அரசு முயற்சிக்கிறது. அதை எதிர்த்து போராடுவேன். விவசாயத்தை அழித்து செய்யப்படும் எந்த திட்டத்துக்கும் ஒத்துழைப்பு தர மாட்டேன். அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளம், குட்டைகளுக்கான இரண்டாம் திட்டம் நிறைவேற்ற பாடுபடுவேன்.
அடித்தட்டு மக்களின் பிரச்னைக்காக களமிறங்கி போராடுவேன். அன்னுார் அரசு மருத்துவமனையை, 100 படுக்கைகள் கொண்டதாக தரம் உயர்த்தவும், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டுக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்லும்படி செய்யவும், சேவூரில் விவசாயிகளுக்கு சேமிப்பு கிடங்குகள் குளிர்சாதன வசதியுடன் அமைக்கவும் முயற்சிப்பேன்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
